சுவாதி கொலை விவகாரம்: சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்ம சாவு!

சுவாதி கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.  .

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜூன் 24ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஒருதலை காதல் காரணமாக சுவாதியை கொலை செய்ததாக கூறி, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை ஜூலை 1ஆம் தேதி போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் கையெழுத்து பரிசோதனைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ராம்குமார், தனக்கும் சுவாதி கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று நீதிபதியிடம் நேரடியாக முறையிட்டதோடு, மாதிரி கையெழுத்து போட்டுத் தரவும் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், சுவாதி ஆணவ கொலை செய்யப்பட்டார் என்றும், இக்கொலையில் அவரது உறவினர்களுக்கும், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாயின. இது குறித்து தமிழக போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ராம்குமாரின் குடும்பத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திலீபன் மகேந்திரன், தமிழச்சி, ட்ராபிக் ராமசாமி உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்கள் வற்புறுத்தி வந்தார்கள்.

இந்நிலையில், ராம்குமார் இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். சென்னை புழல் சிறையில், விசாரணை கைதிகளுக்கான பிரிவில் அடைக்கப்பட்டிருந்த அவர், மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியைக் கடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், போலீசாரின் இந்த திரைக்கதை – வசனத்தை பெருவாரியான மக்கள் நம்பத் தயாராக இல்லை. யாரையோ காப்பாற்ற ராம்குமாரின் வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

சுவாதி கொலை வழக்கில் ஏற்கெனவே பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத நிலையில், ராம்குமாரின் மர்மச்சாவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.