சுவாதி குடும்பத்துக்கும் இந்த கலைச்செல்விக்கும் என்ன தொடர்பு?

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையை ஆரம்பத்திலிருந்தே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சமஸ்கிருத பார்ப்பன மதவெறி அமைப்பினரும், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற பார்ப்பன பிரபலங்களும் திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முதலில், பிலால் என்ற முஸ்லிம் இளைஞர் தான் சுவாதியை கொன்ற குற்றவாளி என்ற தகவலை இவர்கள் பரப்பினர். ஹெச்.ராஜா இதற்கும் ஒரு படி மேலே போய், இக்கொலையில் இஸ்லாமிய அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது என புரிந்துகொள்ளும் விதமாக விஷமத்தனமாக பேட்டி அளித்து வந்தார்.

சுவாதியை ஒருதலைக் காதல் காரணமாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கொலை செய்ததாக போலீசார் குற்றம்சாட்டி, அவரை கைது செய்தனர். உடனே, “ராம்குமார் வெறும் அம்புதான்; ஏவியவர்கள் வேறு எங்கோ இருக்கிறார்கள். அவர்கள் மத அமைப்பினராகவோ, தீவிரவாத அமைப்பினராகவோ இருக்கலாம்” என்று விஷம் கக்கினார் ஹெச்.ராஜா.

இதனையடுத்து, சமஸ்கிருத பார்ப்பன மதவெறி அமைப்பைச் சேர்ந்த ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர், ஏதோவொரு திட்டத்துடன் அழையா விருந்தாளியாக ராம்குமார் சார்பில் தானே வலிய ஆஜரானார். ராம்குமார் குற்றவாளி அல்ல, அவரது கழுத்தை போலீசார்தான் அறுத்தனர் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். அதன்பின் அவர் ஹெச்.ராஜாவின் நெருங்கிய நண்பர் என்ற குட்டு உடைந்ததால், எல்லோரும் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இனியும் நடிக்க முடியாது என வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் ஜி.கிருஷ்ணமூர்த்தி.

இதற்கிடையில், சுவாதி முகமது பிலால் சித்திக் என்பவரை காதலித்து வந்தார் என்றும், மதம் மாறி அவரை திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இருந்தார் என்றும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன. இதனால் இது ஆணவக் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். “இந்த வழக்கின் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. யாரையோ காப்பாற்றும் நோக்கில் போலீஸாரின் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு ஒருதலைக் காதல் காரணம் அல்ல. ராம்குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சுவாதியைக் காதலித்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மதம்விட்டு மதம் மாறும் முயற்சியில் இருந்ததால் இந்தக் கொலை நடந்திருக்கலாம். போலீஸ் விசாரணையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எனக்குக் கிடைத்த தகவல்படி, முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்திருக்கிறார் சுவாதி. ரம்ஜான் மாதத்தில் நோன்பும் கடைபிடித்தார்” என்று பேட்டி அளித்தார் திருமாவளவன்.

திருமாவளவனின் சந்தேகம் நியாயமற்றது என்றால், சுவாதியின் குடும்பத்தினர் தான் கொந்தளிக்க வேண்டும்; விளக்கம் அளிக்க வேண்டும்; போலீசில் புகார் கொடுக்க வேண்டும். ஆனால், சுவாதியின் குடும்ப உறுப்பினரோ, உறவினரோ அல்லாத கலைச்செல்வி என்ற பெண் திடுத்திப்பென இந்த விவகாரத்துக்குள் (வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி போல) மூக்கை நுழைத்து, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.

கலைச்செல்வி தனது மனுவில், “ரம்ஜான் மாதத்தில் சுவாதி நோன்பு இருந்ததாக ஆதாரமில்லாத, அவதூறான தகவல்களைக் கூறி வருகிறார் திருமாவளவன். அவரது பேச்சுக்கள் அனைத்தும் கொலையில் கைதான ராம்குமாருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரது கருத்துக்கள் அனைத்தும் சட்டத்திற்கு விரோதமாக இருக்கின்றன” என குறிப்பிட்டிருக்கிறார்.

சுவாதி குடும்பத்தினருக்கு இல்லாத அக்கறை இந்த கலைச்செல்விக்கு ஏன் என்ற கேள்வியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விசாரணையில் இறங்கியபோது தான் தெரிய வந்திருக்கிறது – இந்த கலைச்செல்வியும் ஹெச்.ராஜாவுக்கு வேண்டப்பட்டவர் தானாம். ‘தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம்’ என்ற பெயரில் ஒரு லெட்டர் பேடு சங்கம் தொடங்கி, அதன் தலைவராக இருக்கும் கலைச்செல்வி, ஹெச்.ராஜா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத பார்ப்பன மதவெறி அமைப்பினர் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவராம். (மேலே உள்ள படத்தையும் கீழே உள்ள படத்தையும் பார்க்கவும்.)

0a2e

இப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் திரைப்பட இயக்குனரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பரப்புரையாளருமான சிபிசந்தர் கூறியிருப்பதாவது: “சுவாதி படுகொலையில் இயல்பாக எழும் கேள்விகளை எழுச்சித்தமிழர் கேட்டதால், ஏதோ ஒரு மர்மத்தை மறைப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்யும் ஹெச்.ராஜாவின் தூண்டுதலின் பேரில், கலைச்செல்வி என்கிற பெண், எழுச்சித்தமிழர் மீது வழக்கு தொடுத்துள்ளார். அந்த கலைச்செல்வியின் பயணத்தில் யார் யாரெல்லாம் இணைந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும். புள்ளிகள் எல்லாம் எங்கே இணைகிறது… கவனியுங்கள்….”

புள்ளிகள் எல்லாம் ஹெச்.ராஜா வகையறாக்களிடமே போய் இணைவதால், இவர்கள் ஏதோவொரு பெரிய நாசகார சதித்திட்டத்துடன் தான் தீவிரமாக இயங்குகிறார்கள் என்ற சந்தேகம் வலுக்கவே செய்கிறது. எனவே, திருமாவளவன் சிபிஐ விசாரணை கோருவது நியாயம் மட்டும் அல்ல, அவசர அவசியமும்கூட!

– அமரகீதன்