ராம்குமாருக்காக தானே வலிய ஆஜராகும் பாஜக வக்கீல் மீது சந்தேகம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். சுவாதி பிராமணப் பெண்; அவரை ஒரு முஸ்லிம் கொலை செய்துள்ளார் என்றும், இது ‘லவ்-ஜிகாத்’ கொலை என்றும் ஒரு பொய்யான தகவலை ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா உள்ளிட்ட பார்ப்பன / இந்துத்துவ கும்பல் திட்டமிட்டு பரப்பியது. இதன்மூலம் தமிழகத்தில் இந்து – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த அது முயன்றது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில், ராம்குமார் என்ற இளைஞரை இம்மாதம் (ஜூலை) 1ஆம் தேதி முன்னிரவு போலீசார் கைது செய்தனர். கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தான் சுவாதியை கொன்ற கொலையாளி என்றும், அவருக்கு இதில் கூட்டாளிகள் யாரும் இல்லை என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த 2ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கு அடுத்த நாள், அதாவது 3ஆம் தேதி, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா, “சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் அம்பு மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள வலிமையான சக்தி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

“இதில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் அதிகம் உள்ளன. 3 மாதங்கள் மட்டுமே சென்னையிலிருந்த ராம்குமார், சுவாதியிடம் காதலை தெரிவித்து, அவர் ஏற்க மறுத்ததால் கொலை செய்ததாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. அவர் பயன்படுத்திய கொலைக் கருவி, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதம் போல உள்ளது.

“சென்னைக்கு வேலை தேடிச் சென்றவர், வீச்சரிவாளுடன் சென்றது ஏன்?  ராம்குமார், சுவாதியை கொலை செய்வதற்காகவே சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். ராம்குமார் வெறும் அம்பு தான். அவரை எய்த சக்தி எங்கோ இருக்கிறது. எனவே இந்த கொலை வழக்கில் பின்னணியில் உள்ள சக்தி யார், எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கும் சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். அந்த சக்தி தீவிரவாதமா, மதவாத சக்தியா, அரசியல் சக்தியா என்பதை போலீசார் தான் தீவிரமாக புலன் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும்” என்றார் ஹெச்.ராஜா.

அதாவது, வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில் தான் ராம்குமார் சுவாதியை கொன்றார் என்பது இந்துத்துவ ஹெச்.ராஜாவின் திரைக்கதை. ராம்குமாரை கைது செய்வதற்கு முன் இந்துத்துவ கும்பல் அவிழ்த்துவிட்ட திரைக்கதையின் சற்று மாறிய வடிவம் தான் இது.

ஹெச்.ராஜா இப்படி பேட்டியளித்த 2 நாட்களுக்குப்பின், அதாவது கடந்த 5ஆம் தேதி (செவ்வாய் கிழமை) ஹெச்.ராஜாவின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்துத்துவவாதியான ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீல், அழையா விருந்தாளியாக தானே வலிய முன்வந்து இந்த வழக்குக்குள் மூக்கை நுழைத்து, ராம்குமாருக்கு ஆதரவாக ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, ‘இரும்படிக்கும் இடத்தில் ஈ-க்கு என்ன வேலை? ராம்குமார் மீது இந்த பூணுலுக்கு அப்படி என்ன திடீர் கரிசனை?’ என அனைவரையும் வியக்க வைத்தார்.

ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று (6ஆம் தேதி) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில் மாநகர அரசு வக்கீல் ஜெகன் ஆஜராகி, “இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராம்குமார் மருத்துவமனையில் மயங்கிய நிலையில் சிகிச்சை பெறும்போது, அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து யாரும் அணுகவில்லை. இந்த மனுவை தாக்கல் செய்ய ராம்குமாரிடம் வக்காலத்து மனு வாங்கவில்லை. அவரது உறவினர்களிடம் கூட அனுமதியைப் பெறாமல், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இம்மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி வாதிடுகையில், “ஜாமீன் மனுக்களை மனுதாரரிடம் வக்காலத்து பெற்று தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ராம்குமார் சார்பாகத்தான் இதை வழக்கறிஞர் மகேந்திரன் தாக்கல் செய்துள்ளார். அவருக்காக நான் வாதாட உள்ளேன்” என்றார்.

இதையடுத்து இம்மனு மீதான விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஹெச்.ராஜாவின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தானே வலிய வந்து, ராம்குமாரின் அனுமதியைப் பெறாமலே அவருக்காக ஆஜராவதில் ஏதோவொரு இந்துத்துவ சதி ஒளிந்திருக்கக் கூடும் என சந்தேகிப்பதாக சில பதிவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்