ராம்குமார் மர்மச்சாவு: ‘இருமுகன்’ விக்ரம் டெக்னிக்கை போலீஸ் பயன்படுத்தியதா?
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியை கடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறையும், காவல்துறையும் அறிவித்தன. ஆனால் இந்த ‘தற்கொலை கதை’யை, தமிழ்நாட்டை ஆளும் புண்ணியவதியையும், அவருக்கு பால்காவடி – பன்னீர்காவடி எடுக்கும் பக்தகேடிகளையும், அவரது விசிலடிச்சான் குஞ்சுகளையும் தவிர, சிறிதளவாவது சுயசிந்தனை உள்ள எவரும் நம்பத் தயாராக இல்லை.
சிறையில் இருந்த ராம்குமாரை, சிறைத்துறையினர் / காவல்துறையினர் தனியே (சமையலறைக்கு?) அழைத்துச்சென்று, தங்களது ‘ஒருதலைக் காதல்’ ஸ்கிரிப்ட்டுக்கு அவரை உடன்படச் செய்வதற்காக, ‘இருமுகன்’ படத்தில் ‘ரா’ அதிகாரியாக வரும் விக்ரம் பயன்படுத்தும் டெக்னிக்கை, மின்சார கம்பி சகிதம் பயன்படுத்தியதன் விளைவாக ராம்குமாரின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றுகூட சந்தேகம் எழுந்துள்ளது.
சுரேஷ் கண்ணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு::
விக்ரம் நடித்து சமீபத்தில் வெளியான ‘இருமுகன்’ படத்தில் ஒரு காட்சி.
ஒரு குற்ற வழக்கில் சந்தேகப்படுவனை மலேசிய போலீஸ் விசாரணைக்கு அமர்த்தி வைத்திருக்கிறது. அவன் வாயைத் திறவாமல் “என்னுடைய வக்கீல் வரட்டும்” என்று சாதிக்கிறான். எனவே அவனிடமிருந்து தகவல் எதையும் பெயர்க்க முடியவில்லை. சட்டவிதிகளுக்குட்பட்டு ‘காத்திருக்கலாம்’ என மலேசிய போலீஸ் நினைக்கிறது.
இப்போது இந்திய தரப்பிலிருந்து ஒருவன் (ஹீரோ விக்ரம்) உள்ளே நுழைகிறான். சஸ்பென்ஷனில் இருக்கும் RAW ஏஜெண்ட் அவன். விதிகளில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. மலேசிய போலீஸின் மெத்தனம் அவனுக்கு எரிச்சலூட்டுகிறது.
“இரண்டே நிமிடம், சாட்சியுடன் தனியாக பேச வேண்டும்” என்று அனுமதி கேட்கிறான். ‘சரி, பேசத் தானே போகிறான்’ என்று அனுமதி தரப்படுகிறது.
உள்ளே போனவன், எடுத்த எடுப்பிலேயே மூன்றாவது டிகிரியை கையாள்கிறான். சாட்சியை அடித்து வீழ்த்தி, அருகிலிருக்கும் மின்சார ஒயரில் அவனைச் சுற்றி, பிளக்கை பாயிண்ட்டில் செருகி, மின்சார கம்பியை அவனது வாயருகில் கொண்டுபோய், “வைத்து விடவா” என்று மிரட்டுகிறான். அவனது மூர்க்கத்தைப் பார்த்தால் செய்துவிடுவான் போலத்தான் தோன்றுகிறது.
சாட்சி பயந்துபோய் உடனே தகவலை கக்கி விடுகிறான். மாகி நூடுல்ஸ் மாதிரி இரண்டே நிமிடங்களில் ‘உண்மை’ தயாராகி விடுகிறது. இந்திய போலீஸாரின் பெருமை வெளிப்படும் காட்சி இது.
**
சாட்சியின் அடிப்படை உரிமைகளை, இந்த இந்திய தரப்பு அதிகாரி மீறுகிறானே என்று பார்வையாளர்கள் எவருக்கும் நெருடவில்லை. அவனது சாகசத்தைக் கண்டு திரையரங்கில் ஒரே கைத்தட்டல்.
**
இதில் நான் எதையும் சொல்ல முற்படவில்லை. கூட்டிக்கழித்து கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.