(சாதி) சட்டம் தன் கடமையை செய்துவிட்டது…

பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம் சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞர் தற்போது கொல்லப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தின முன் ராம்குமார் பேசுவதால் வெளிவரக்கூடிய உண்மைகளில் இருந்து பலரைக் காப்பற்ற செய்யப்பட்ட கொலையை ‘தற்கொலை’ என்று ஊடகங்கள் அறிவித்துவிட்டன.

சாதிச் சட்டமும் சதிச் செயல்களில் வல்ல காவல் துறையும் தன் கடமையைச் செய்துவிட்டது.

சிறையில் ஒருவர் உண்மையாகவே தற்கொலை செய்துகொண்டால்கூட அதனை கொலை என்று சொல்கிறது மனித உரிமைகளின் நீதி. ஆனால் விசாரணை, உடற்கூறு ஆய்வுகள் எதுவும் இன்றி ஊடகங்கள் “தற்கொலை“ என்று உறுதிப்படுத்திவிட்டன.

இனி அனைத்து சாதிச் சதிகளும், கூலிக்கொலைகாரர்களின் குற்றத் தடயங்களும் புதைக்கப்பட்டுவிடும். தமிழகத்தில் அமைதி நிலவும்.

குற்றம் செய்திருந்தால்கூட (?) ஒருவரது குடும்பத்தினரை அவமதிக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ராம்குமாரின் குடும்பத்தினரை இத்தனை கொடுமையாகக் காட்சிக் கொலை செய்து அவமதிக்கப்பட்ட உடல்களாய் அவர்களை மாற்றிவிட்ட “ஊடகங்களின்” கையில் இருந்தவை காட்சிப்படக் கருவிகள் அல்ல, ரயில்நிலையத்தில் கொல்லப்பட்ட பெண்ணைப் பிளந்த கொடுவாளின் மாறுவேடம்.

சாதி கண்டு பொங்கும் மனிதாபிமானம், பெண்ணென்ற இரக்கம், தமிழகம் கொலைக்காடாக மாறிவிட்டது என்ற கூச்சல்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட சாதி ஆணவக்கொலைகள், இந்த ஆண்டில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சாதிகொடுங்கொலைகள். (PUCL களஆய்வு). இதுபற்றி பெருமைப்படுகிற சாதித் தமிழர்கள் ராம்குமாரின் கொலையைக் கொண்டாடுவார்கள்.

புலனாய்வுகள் இன்றியே புலப்படுகிறது மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்.

-பிரேம்

எழுத்தாளர்