மர்மம் தொடருகிறது: பேரறிவாளனை தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி!
வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை தாக்கிய கைதி தற்கொலைக்கு முயன்றதையடுத்து சிறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா (46) இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன.
தனக்கும், ராஜேஷ் கண்ணாவுக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை என்றும், தன்னை ஏன் அவர் தாக்கினார் என்பது புரியாத புதிராக இருக்கிறது என்றும், இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பேரறிவாளன் கூறியதாக அவரை சந்தித்துப் பேசிய அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பேரறிவாளனை தாக்கிய கைதி ராஜேஷ் கண்ணா, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஷ்கண்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறைக்குள் பேரறிவாளன் தாக்கப்பட்டது, அவரை தாக்கிய கைதி தற்கொலைக்கு முயன்றிருப்பது ஆகிய அசாதாரண நிகழ்வுகளை பார்க்கும்போது, பேரறிவாளனுக்கு எதிராக யாரோ, எங்கோ மிகப் பெரிய சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற முயற்சி செய்து வருவதாகவே தோன்றுகிறது. எனவே, சிறை அதிகாரிகள் உஷாராகி, பேரறிவாளனுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசர அவசியம்.