ஜீப்ரா – விமர்சனம்
நடிப்பு: சத்யதேவ், டாலி தனஞ்செயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுனில் வர்மா, சத்யா அக்காலா, ஜெனிஃபர் பிக்கினட்டோ மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஈஷ்வர் கார்த்திக்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு: சத்யா பொன்மர்
படத்தொகுப்பு: அனில் கிரிஷ்
தயாரிப்பு: ஓல்டு டவுன் பிக்சர்ஸ் – பத்மஜா ஃபிலிம்ஸ் இந்தியா (பி) லிட்.
தயாரிப்பாளர்: எஸ்.என்.ரெட்டி – பாலசுந்தரம் – தினேஷ் சுந்தரம்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் AIM
வங்கி ஊழியர்கள் நினைத்தால் பொதுமக்களின் பணத்தை எப்படி எல்லாம் கையாடல் செய்யலாம் என்பதை எடுத்துச் சொல்லும் ‘தெகிடி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களின் வரிசையில் தற்போது கூடுதல் தகவல்களுடன், கூடுதல் சிறப்புடன் உருவாகி வெளிவந்திருக்கிறது ’ஜீப்ரா’ திரைப்படம்.
ஒரு வங்கி ஊழியரான நாயகன் சத்யதேவ், மற்றொரு வங்கியில் பணியாற்றும் தனது காதலி பிரியா பவானி சங்கரை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக, ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக ரூ. 4 லட்சத்தை எடுக்க, அதே வங்கிக் கணக்கில் இருக்கும் ரூ.5 கோடியை சத்யதேவ் பெயரில் வேறொருவர் மோசடியாக எடுத்து விடுகிறார். அந்த 5 கோடி ரூபாயால் மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சத்யதேவ், அதில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட, அதில் வெற்றி பெற்றாரா, இல்லையா? அவரது பெயரை பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்தது யார்? மற்றொரு ட்ராக்கான வில்லன்கள் சுனில் மற்றும் டாலி தனஞ்செயா இடையிலான ஈகோ மோதலின் முடிவு என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை விறுவிறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் சொல்வது தான் ‘ஜீப்ரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக, அறிவுபூர்வமாக களவு செய்யும் வங்கி ஊழியராக சத்யதேவ் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, அப்பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை மிகையாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் அளவாக, அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். தன்னை ஒரு மர்ம நபர் சதி வலையில் சிக்க வைக்கிறார் என்பதை உணர்ந்து பதறும் காட்சிகளில், பதட்டத்தை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்தி பதறச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார்.
கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடித்திருக்கும் டாலி தனஞ்செயா, பார்வையில் மிரட்டி, நடிப்பில் அசத்தியிருக்கிறார். அதுபோல் வில்லத்தனம் கலந்த காமெடியனாக நடித்திருக்கும் சுனில் வர்மாவும் கலக்கியிருக்கிறார்.
’ஏ டூ ஒய் பாபா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் குறைவான நேரமே திரையில் வந்தாலும், நிறைவான நடிப்பைக் கொடுத்து பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.
தனது நகைச்சுவையால் பார்வையாளர்களைக் குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்திருக்கிறார் சத்யா அக்காலா. அவர் பேசும் சில வசனங்கள் இரட்டை அர்த்தம் கொண்டதாக இருந்தாலும், முகம் சுளிக்க வைக்காமல், ரசிக்க வைக்கிறது.
ஜெனிபர், சுரேஷ் மேனன் உள்ளிட்ட ஏனையோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஈஷ்வர் கார்த்திக் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். வங்கியில் நம் பணம் பத்திரமாக இருக்குமா? என்று ஒவ்வொரு பார்வையாளரும் சந்தேகிக்கும் அளவுக்கு பயமுறுத்தியிருக்கிறார். வங்கியில் கணக்கு வைத்திருக்கிற ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இதன்மூலம் ஏற்படுத்தியிருக்கிறார். இதை டாகுமெண்டரி போல் இல்லாமல் சுவாரஸ்யமான புனைக்கதையாக, விறுவிறுப்பான திரைப்படமாக படைத்தளிப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
சத்யா பொன்மரின் ஒளிப்பதிவு, ரவி பஸ்ரூரின் இசை, அனில் கிரிஷ்ஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘ஜீப்ரா’ – இக்காலத்துக்கு தேவையான படம்; ஒவ்வொருவரும் அவசியம் பாருங்கள்!