சிறைக்குள் தள்ளியும் அடங்காத யுவராஜ்: சங்கர் கொலையை ஆதரித்து அறிக்கை!

“ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை என பெயர் சூட்டுவது ஏன்? இவ்வாறு பேசுபவர்கள், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் என அனைவரும் கூறும் ஒரே காரணம், அவன் பட்டியலினத்தை சேர்ந்த சமூகம். இப்படிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மரணம் நிகழ்த்தப்படுமானால் அதற்கு சமூகம் காரணம் இல்லை. பெண்ணை கவர்ந்து செல்பவன் பெண் வீட்டாரை நடைபிணமாக்குகிறான். அதன் வெளிப்பாடு தான் இத்தகைய மரணங்கள். இதனை இனியும் வேடிக்கை பார்க்காமல் காவல் துறை அடக்க வேண்டும்” என்று உடுமலைப்பேட்டையில் சங்கர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி இப்படியொரு அறிக்கையை விடுத்திருப்பவர், பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யுவராஜ்.

தானே கைப்பட எழுதி கையொப்பமிட்ட 8 பக்க அறிக்கையை நேற்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போது செய்தியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.  யுவராஜ் கொடுத்த அறிக்கையை வெளியிட்டுள்ள ஊடகங்கள், இது தொடர்பாக எழுப்ப மறந்துவிட்ட கேள்விகள் இவை:

கைதிகளை சந்தித்துப் பேச சம்பந்தப்பட்டவரது உறவினர்களைக்கூட அனுமதிக்காமல் விரட்டியடிக்கும் காவல்துறையினர், யுவராஜூக்கு மட்டும் செய்தியாளர்களைச் சந்திக்க எவ்வாறு அனுமதித்தனர்? இது சட்டத்திற்குட்பட்டு நடந்ததா? இல்லையெனில், அதற்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவர் சிறைக்கு வெளியேயான நிகழ்வுகள் குறித்து அறிக்கை விடுவதை சட்டமும் சிறைவிதிகளும் அனுமதிக்கின்றனவா?

கோகுல்ராஜ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் யுவராஜ், அதேபோன்று நிகழ்த்தப்பட்ட சங்கர் கொலையை ஆதரித்தும் அவ்வாறான கொலைகளைத் தூண்டியும் அறிக்கை விடுவது குறித்து சட்டத்தின் பார்வை என்ன?

கைதியொருவரின் வரம்புமீறிய இத்தகைய சமூகவிரோத நடவடிக்கையை நீதித்துறை தாமாக முன்வந்து விசாரிக்குமா? அவர் அறிக்கை விட்டது சட்ட நடைமுறைகளுக்குப் பொருந்தாது எனில், அதன்பேரிலான நடவடிக்கை என்ன?

கைதாவதற்கு முன்பு அறிக்கைகள் வழியாக சவடால் அடித்துக்கொண்டிருந்த யுவராஜ், சிறைக்குள்ளிருந்தும் அதே வேலையை எவ்வித தடங்கலுமின்றி செய்துகொண்டிருக்க முடிகிறது என்றால், சிறைத்துறையினராலோ, நீதித்துறையினாலோ கட்டுப்படுத்த முடியாத செல்வாக்கோடு அவர் இருப்பதாக கருதலாமா?

– ஆதவன் தீட்சண்யா

எழுத்தாளர்

(இவருடைய சமீபத்திய நாவல் மீசை என்பது வெறும் மயிர்)