“ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவம்!” – சஞ்சிதா ஷெட்டி

‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரகுமான் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தி பேசினார்.

“20 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பாளர் யோகி, சுபா எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்கள். என்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு படம் பண்ணனும் என சொல்லிட்டே இருப்பாங்க. நான் தான் சினிமா ரிஸ்க், வேணாம்னு சொல்லிட்டே இருந்தேன். பின் ஒரு நாள் ரெஹானா மேடம் வழிகாட்டுதலில் படத்தை துவங்கியதாக சொன்னார்கள். கதை ரொம்ப நல்லா இருந்துச்சி. எனக்கும் திருப்தியாக இருந்தது. பாடல்களும், ஒரு சில காட்சிகளும் பார்த்தேன், சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோரையும் ஈர்க்கும் தலைப்பாக அமைந்துள்ளது. ரெஹானாவின் இசை படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. துருவங்கள் 16 படத்தை போலவே இதுவும் முழுக்க புதுமுகங்கள் நடித்த படமாக இருந்தாலும் அதே போலவே பெரிய வெற்றியை பெறும்” என்றார் சிறப்பு விருந்தினர் நடிகர் ரகுமான்.

“படத்தின் ட்ரைலர் மாதிரியே மொத்த படமும் ரசிகர்களை சிரிக்க வைக்கும். ரெஹானா மேடம் படத்துக்கு பெரிய பில்லர். தயாரிப்பாளர்கள் யோகி, சுபா இருவரும் நினைத்திருந்தால் பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் எங்களை நம்பி படத்தை தயாரித்திருக்கிறார்கள். புதுமுகமான எனக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம்” என்றார் நாயகன் அசார்.

“என் முதல் படத்திலிருந்தே மீடியா எனக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக தான் நினைத்து நடித்து வருகிறேன். அசார் ரொம்ப திறமையான நடிகர். ரெஹானா இசையில் வச்சி செய்றேன், அம்மா பாடல் என சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவம். இந்த தலைப்பு பலரையும் படத்தை பற்றி பேச வைத்துள்ளது” என்றார் நாயகி சஞ்சிதா ஷெட்டி.

y4

“நான் கனடா போனபோது ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க சுபா. ஒரு பட்ஜெட் கொடுத்தேன். சென்னை வந்தப்புறமும் அவங்க கேட்டுட்டே இருந்தாங்க. நானும் நிறைய பேரை பார்த்தேன். அதில் கிடைத்தவர் தான் விக்னேஷ் கார்த்திக். காமெடி படம் தான் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன், அவர் சொன்ன கதையும் ரொம்ப நல்லாவே இருந்தது. அசார் எனக்கு முன்னாடியே அறிமுகமானவன், விக்னேஷ் கார்த்திக் கிட்ட சொன்னப்போ அவரும் அசார் என் நண்பன் தான், எனக்கு ஓகேன்னு சொன்னார். சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், ஈடன், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க. காமெடிக்கு பஞ்சமில்லை” என்றார் இணை தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான ஏஆர் ரெஹானா.

“விக்னேஷ் கார்த்திக், அசார், சஞ்சிதா ஷெட்டி மூணு பேரும் என் பிள்ளைகள் மாதிரி. முதல் தடவை விக்னேஷ் கார்த்திக்க பார்த்தப்போ ரொம்ப சின்ன பையனா இருக்காரே, இவர் எப்படி படத்தை இயக்குவார்னு சந்தேகமா இருந்துச்சி. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். நாயகன் அசாரை மாத்திட்டு வேற ஹீரோ புக் பண்ண நினைச்சேன், ஆனால் அசார் மிகவும் திறமையானவர் என்பதை நிரூபித்தார். சூது கவ்வும் நாயகி சஞ்சிதா ஷெட்டி தான் நாயகின்னு சொன்னதும் உடனே புக் பண்ண சொல்லிட்டேன்” என்றார் தயாரிப்பாளர் சுபா தம்பி பிள்ளை.

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க. இந்த படத்தோட ட்ரைலரே படத்தை பத்தி சொல்லும். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாமே சிறப்பாகவே அமைஞ்சிருக்கு. அசார் ரொம்ப இயல்பான நடிகர். ட்ரைலர், பாடல்கள் பார்த்துட்டு சிம்பு சாரும், சந்தானம் சாரும் ஃபோன் பண்ணி அசாரை வாழ்த்துனாங்க. அவர்களுக்கு என் நன்றிகள்” என்றார் சிங்கப்பூர் தீபன்.

“சேஃபா ஒரு காமெடி படம் பண்ணலாம்னு தயாரிப்பாளர்கள் நினைக்குறப்ப, ஒரு வித்தியாசமான படத்தை பண்ணலாம்னு முன்வந்த தயாரிப்பாளர்களுக்கும், ரெஹானா மேடத்திற்கும் நன்றி. கல்லூரிக்கு போகும் ஒரு நாயகனா அசார் கிடைச்சிருக்காரு. சஞ்சிதா ஷெட்டி ரொம்ப சின்சியரான நடிகை, ஒரு நாள் கூட அவரால் படப்பிடிப்பு தாமதமானது கிடையாது. சிங்கப்பூர் தீபனுக்கு ஏன் பெரிய பிரேக் கிடைக்கலனு தெரில. இந்த படத்துல அவருக்கு நல்ல பேரு கிடைக்கும். கவிராஜ் என்ற உதவி இயக்குனர் சொன்ன தலைப்பு தான் இந்த ‘ஏண்டா தலைல எண்ண வைக்கல’. பல பேருக்கு படத்தை கொண்டு போய் சேர்த்ததே இந்த தலைப்பு தான்னு சொல்லலாம்” என்றார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

இந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வம்சி தரன் முகுந்தன், எடிட்டர் சிஎஸ் பிரேம், தயாரிப்பாளர் யோகி தம்பி பிள்ளை, ஸ்டுடியோ 9 விஜித் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.