யாத்திசை – விமர்சனம்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2023/04/0a1f-2.jpg)
நடிப்பு: ஷக்தி மித்ரன் (ரணதீர பாண்டியன்), சேயோன் (கொதி – எயினர் குழுத் தலைவன்), குரு சோமசுந்தரம் (எயினரின் பூசாரி), மு.சந்திரகுமார், சமர் (துடி – எயின வீரன்), செம்மலர் அன்னம், ராஜலட்சுமி கோபாலகிருஷ்ணன் (தேவரடியார்), சுபத்ரா (பெரும்பள்ளி தலைவி), வைதேகி அமர்நாத் (தேவரடியார்) மற்றும் பலர்
இயக்கம்: தரணி ராசேந்திரன்
ஒளிப்பதிவு: அகிலேஷ் காத்தமுத்து
படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்
இசை: சக்கரவர்த்தி
தயாரிப்பு: ‘வீனஸ் இன்ஃபொடைன்மெண்ட்’ கே.ஜே.கணேஷ்
வெளியீடு: ’சக்தி ஃபிலிம் பேக்டரி’ சக்திவேலன்
பத்திரிகை தொடர்பு: நிகில்
# # #
யாத்திசை..!
தமிழின் சிற்றிலக்கியங்களில் பரணி இலக்கியம் என்பது மன்னர்களின் போர் முறைகளை பற்றியது. இதுவரை தமிழில் சங்க மன்னர்களின் போர் முறைகளை இந்த அளவிற்கு நுணுக்கமாக சித்தரித்த ஒரு படம் வெளிவந்ததே இல்லை. இந்த படம் மிகப்பிரமாண்டமாக பரணி இலக்கியம் பேசுகிறது.
தமிழ் மன்னர்களில் சேர, சோழர்களை முற்றிலும் அழித்துவிட்டு ரணதீரன் என்னும் பாண்டிய மன்னன் உச்சத்தில் இருந்த நேரம். அவனது முக்கிய எதிரிகளில் சேரன் நாடு கடத்தபட்டிருக்கிறான். சோழன் காடுகளுக்குள் பதுங்கியிருக்கிறான். சோழனுடன் சேர்ந்து ரணதீரனை எதிர்த்த பல்வேறு பழங்குடிகள் காடுகளுக்குள் பதுங்கி வேட்டையாடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அதில் ‘எயினன்’ என்னும் குடித்தலைவன் ‘கொதி’, ரணதீரனை கொன்று தங்களின் சுதந்திரத்தை பெற நினைக்கிறான்.
மன்னனை கோயிலுக்கு செல்லும் வழியில் திடீரென பாய்ந்து கொன்று கலவரத்தை உருவாக்கி சோழ பகுதியை கைப்பற்றுவது கொதியின் திட்டம். கோட்டையை கைப்பற்றியதும் சோழ வீரர்கள் துணை கிடைக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். திட்டம் என்ன ஆனது, கோட்டையை கைப்பற்றின பின் சோழர்கள் உதவி கிடைத்ததா. கொதியின் கலகம் வென்றதா ரணதீரன் என்ன ஆனான் என்பது தான் கதை…
இதில் போர்களுக்கு செல்லும் முன் பன்றி, ஆடு, எருமையை தொடர்ந்து நர பலி கொடுப்பது வரை போருக்கு முன் சடங்குகளில் தொடங்கி மிக நிதானமாக பரணி பேசுகிறார்கள். இங்கிலாந்து உருவாகுறதுக்கு முன்னாடி அங்கே க்றிஸ்துக்கு முன்னாடி Vikings என்ற பழங்குடியினர் போர் முறைகளை நிறைய படங்களில் பார்த்திருக்கேன். கிட்டத்தட்ட அதை போன்ற ஒரு உணர்வை படம் கொடுத்தது. தமிழில் ஒரு Apocalypto என சொல்வேன். அந்த அளவிற்கு காடுகளுக்குள் சண்டைக்காட்சிகளை ரத்தமும் சதையுமாக படமாக்கி இருக்கிறார்கள்.
கொதியின் உற்ற நண்பன் ‘துடி’. அவனது கடைசி சண்டை காட்சிகள் பழங்குடி வாழ்க்கை முறைக்கு துல்லியம். அவ்வளவு கூட்டத்தை நேர்த்தியாக முழு வெறியோட சண்டையிடுவதாக காட்சிப்படுத்திய விதமே மிரட்டல்.
எடிட்டிங் மோசம்ன்னு நிறைய விமர்சனங்களை பார்க்க முடிந்தது. ஆனால் குழப்பமில்லாமல் இந்த படத்தை கொண்டு சேர்த்த விதத்தில் எனக்கு எடிட்டிங் தான் சிறப்பாக தெரிந்தது. இசை, கேமரா, அந்த நிலப்பகுதி (பாதி தேனியை சுற்றி எடுத்திருக்காங்க) போர் முறைகள், என எல்லாமே ஆச்சரியம். இதை செய்தது ஒரு புது டீம் என்பது இன்னும் ஆச்சரியம்.
பொதுவா தமிழ் போர் காட்சிகளை glorify செய்திருப்பார்கள். சண்டைன்னா அதில இருக்க ஒரிஜினாலிட்டி வராது. அதை எல்லாம் இந்த படம் புரட்டி போட்டிருக்கு.. 2000 வருஷத்துக்கு முன்னாடி காட்டு மிராண்டி வாழ்க்கை, மானம், வீரம், போர் அதற்கான இலக்கணம். இது மட்டுமே படம்..
பழங்கால போர் முறைகளில் மன்னனை ஒற்றைக்கு ஒற்றை போருக்கு அழைப்பது. போருக்கு முன் மன்னன் தன்னோட சேனை தளபதியிடம், “கொதி வென்றால் கோட்டையை அவனுக்கு கொடுத்துட்டு சிறு கிளர்ச்சியும் இல்லாமல் கலைந்து செல்ல வேண்டும் என உத்தரவிடுவது” என அனைவரும் நியாயவாதிகள்…! 
போர் என்பது அதிகாரத்தின் அவசியம். என்னோட ஆசைக்கும் தேவைக்கும் நான் அழிந்து கெடுவேன் அல்லது அழிப்பேன். அவ்ளோ தான்.. என்ற இயற்கை நீதி தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்க கெட்டவன் என்பதே இல்லை. படத்தில ஒரே ஒரு கேரக்டர் மேல தான் நமக்கு வெறுப்பு வரும். அது யாருன்னு நீங்களே பாத்துக்கோங்க.. நான் சொன்னா கலவரம் வரும்.
படம் முழுக்க சங்க தமிழில் பேசுகிறார்கள். காளகேயர் பாஷை போல அதை பேசி பழகினதுக்கே இவிங்களுக்கு தனி க்ரெடிட் தரணும். ஒரு மெகா சீரியலுக்கான கதை, அதை போலவே ஒரு புள்ளி வச்சு முடிக்கப்பட்டிருக்கு.. எத்தனை பாகம் வேணா எடுக்கலாம். ஆனா அதுக்கு படம் வெற்றி பெறணும்.
இன்னும் இரண்டு நாளில் PS2 சூறாவளி வந்து இதை மூழ்கடிச்சுரும். அதுக்குள்ள அவசியமா தியேட்டர்ல பாருங்க. தமிழில் ஒரு புது அனுபவம்.. மிஸ் பண்ணாதீங்க.
Sarav Urs