யானும் தீயவன் – விமர்சனம்
அமைச்சராக வரும் சந்தானபாரதியின் ஆதரவில் ஊரின் முக்கிய தாதாவாக வலம் வருகிறார் ராஜு சுந்தரம். அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் போலீஸ் கூட அவரிடமிருந்த ஒதுங்கியே இருக்கிறது. இருந்தாலும் அவரது நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. காவல் அதிகாரியாக வரும் பொன்வண்ணன், ராஜு சுந்தரம் செய்து வரும் தவறுகளை மேலோட்டமாக கவனித்து வருகிறார்.
மறுபுறத்தில் நாயகன் அஸ்வின் ஜெரோம் – நாயகி வர்ஷா பொலம்மா இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். வசதியான வீட்டைச் சேர்ந்த இருவரும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாக காதலித்து வரும் இவர்கள், ஒருநாள் வெளியே சென்று வருகையில், மதுபோதையில் அங்கு வரும் ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் வர்ஷாவை கிண்டல் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் வர்ஷாவை தரகுறைவாக திட்டியும் விடுகின்றனர்.
இதனால் கடுப்பாகும் அஸ்வின் அவர்களை அடிக்க செல்கிறார். இந்நிலையில், அஸ்வினை சமாதானப்படுத்தும் வர்ஷா, அவனை அங்கிருந்து கூட்டிச் செல்கிறார். வர்ஷாவை அவளது வீட்டில் பத்திரமாக கொண்டுவிடும் அஸ்வின் மீண்டும் அதே இடத்திற்கு சென்று, வர்ஷாவை கிண்டல் செய்த ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகளை சரமாரியாக தாக்கிவிட்டு செல்கிறார்.
ஊருக்கே தாதாவாக வலம் வந்த தன்னை, சாதாரண இளைஞன் ஒருவர் தாக்கி சென்றதால், அவனை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு சுந்தரம், அஸ்வினை தேடி வருகிறார். இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க, அமைச்சர் சந்தான பாரதிக்கு எதிராக செயல்படுகிறார். இதனால் கோபமடையும் சந்தான பாரதி, ராஜு சுந்தரத்தை கைது செய்ய உத்தரவிடுகிறார். இந்நிலையில், பெற்றோரின் சம்மதம் கிடைக்காத அஸ்வினும், வர்ஷாவும் ரகசிய திருமணம் செய்து ராஜு சுந்தரம் வசிக்கும் வீட்டின் மேல்மாடியில் குடிபெயர்கின்றனர்.
அஸ்வினை தேடிவரும் ராஜு சுந்தரம், தனது வீட்டிற்கு மேல் மாடியிலேயே அஸ்வின் இருப்பதை தெரிந்து கொண்டு, இருவரையும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொள்கிறான். பின்னர் அவர்களை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு, அவர்களை வைத்து போலீசில் இருந்து தப்பிக்கவும் முடிவு செய்கிறான். இவ்வாறாக ராஜு சுந்தரத்திடம் மாட்டிக் கொண்ட அஸ்வின், எப்படி தப்பித்தார்? போலீஸ் ராஜுவை கைது செய்ததா? அஸ்வின் – வர்ஷாவின் திருமணத்தை அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா என்பது படத்தின் மீதிக்கதை.
நாயகன் அஸ்வின் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. வர்ஷா அழகு பதுமையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். நஸ்ரியா சாயலில் இருக்கும் இவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. வர்ஷா வரும் காட்சிகளில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
ராஜு சுந்தரத்தின் கதாபாத்திரம் தான் படத்திற்கே பலம். இதற்கு முன்பு அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே காமெடி கலந்த சாயலில் இருக்கும். ஆனால் இந்த படத்தில் மாஸான தாதாவாக வலம் வரும் ராஜு சுந்தரம், கதைக்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார். பொன்வண்ணன், சந்தான பாரதி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விடிவி கணேஷ், அருண்ராஜா காமராஜ், ஜாங்கிரி மதுமிதா கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
எல்லோருடைய மனதிலும் ஒரு நல்லவன், ஒரு தீயவன் இருப்பான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் வெளிப்படுவான். அதனை படத்தின் மூலம் தெரிவிக்க முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செய்ய வேண்டும். யோசிக்காமல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை காதல், கிரைம் கலந்து உருவாக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் ஜி சேகர் திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கலாம்.
அச்சுராஜாமணியின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் `யானும் தீயவன்’ மாற்றம் கொண்டவன்.