யாதும் ஊரே யாவரும் கேளிர் – விமர்சனம்
நடிப்பு: விஜய் சேதுபதி, விவேக், சின்னி ஜெயந்த், இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: வெங்கட கிருஷ்ண ரோகாந்த்
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்
படத்தொகுப்பு: ஜான் ஆபிரஹாம்
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
தயாரிப்பு: ‘சந்திரா ஆர்ட்ஸ்’ எஸ்.இசக்கி துரை
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
கடுமையான போர்ச்சூழல் காரணமாக குடும்பத்தை இழந்து, நாட்டைத் துறந்து, அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களை, உலக நாடுகளின் எல்லைக்கோடுகளும், அந்நாடுகளின் குடிமக்களுக்கான சட்டதிட்டங்களும் எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன; அவர்களது வலிகளும், எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் எப்படிப்பட்டவை என்பதை உணர்வுபூர்வமாக பேசும் படமாக வெளிவந்திருக்கிறது அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியிருக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம்.
சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போர் காரணமாக அனாதையாக்கப்பட்ட சிறுவன் புனிதன் (விஜய்சேதுபதி), ஒரு பாதிரியாரிடம் (ராஜேஷ்) அடைக்கலம் ஆகிறான். அவனது பிஞ்சுமனதில் பதிந்துவிட்ட போரின் பயங்கர சத்தம், அவனை தொந்தரவு செய்கிறது. இதை கடக்க அவன் எதை எதையோ தட்டி சத்தம் எழுப்புவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறான். இதை கவனிக்கும் பாதிரியார், இசை பயில்வதற்கான வாய்ப்புகளை புனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
இசையில் வல்லவனாக வளரும் இளைஞன் புனிதன், லண்டனில் நடக்கும் இசைப்போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இருக்கிறான். அதே நேரத்தில் அவன் நாடற்றவனாகவும் அடையாளமற்றவனாகவும் இருக்கிறான். இந்த காரணங்கள் அவன் உலகப் புகழடைய தடையாக வந்து நிற்கின்றன.
கொடைக்கானலில் இருக்கும் தேவாலயத்துக்கு வரும் அவன், தன் இசையால் அங்கிருப்பவர்களைக் கவர்கிறான். அங்குள்ள இசைக்குழுவைச் சேர்ந்த மெடில்டா (மேகா ஆகாஷ்), புனிதனை காதலிக்கத் தொடங்குகிறாள்.
லண்டன் இசைப்போட்டியில் பங்கேற்று உலகப்புகழ் பெற வேண்டும் என்ற தன்னுடைய இலக்கை அடைய தனக்கென ஒரு குடிமகன் அடையாளம் வேண்டும் என நினைக்கிறான் புனிதன். கேரட் தோட்டத்தில் வேலைபார்க்கும் இலங்கை அகதியான கனகவள்ளியின் (கனிகா) தம்பி ’கிருபாநதி’ என்று தன்னைச் சொல்லிக்கொண்டு, ஆவணங்களின்படி அவன் “கிருபாநதி”யாக உருவெடுக்கிறான்.
அதேசமயம் காவல்துறை அதிகாரியாக வரும் ராஜன் (இயக்குநர் மகிழ் திருமேனி), கிருபாநதியை கொல்ல நினைக்கிறான். இதற்கு காரணம் என்ன? தன் இலக்கை அடைய ஒரு அகதியாக புனிதன் என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறான்? இவற்றை தாண்டி அவன் இசைக்கலைஞனாக உலக அரங்கில் வெற்றி பெற்றானா, இல்லையா என்பது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் மீதிக்கதை.
இலங்கையில் இருந்து தப்பித்து உடமைகளும் உரிமைகளுமின்றி தமிழகத்தில் தஞ்சமடையும் அகதிகள் எதிர்கொள்ளும் துயரங்களை இப்படத்தில் அழுத்தந்திருத்தமாக உரத்த குரலில் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். காவல்துறை மற்றும் அரசின் கண்காணிப்பில் இருக்கும் அகதிகளின் இயல்பான நகர்வும் அடிப்படை உரிமைகளும் கூட மறுக்கப்படும் அவல நிலையையும் அவர்களின் அன்றாடப்பாடுகளையும் விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. தங்களுக்கான குடியுரிமை அங்கீகாரத்துக்காக நெடும் போராட்டம் நிகழ்த்த வேண்டியிருப்பதைப் பதிவு செய்திருப்பதும் இந்தப் படத்தின் முக்கிய அம்சம்.
புனிதனுக்கும் மெடில்டாவுக்குமான காதல் காட்சிகள், காவல்துறை அதிகாரியின் துரத்தல் காட்சிகள், இரண்டாம் பாதியில் புனிதன் தன் முன்கதையைச் சொல்லும் காட்சிகள், கனகவள்ளியும் அவனும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் ஆகியவை கவனம் ஈர்க்கின்றன. இறுதிக் காட்சியில், லண்டன் இசைப் போட்டி மேடையில் அகதிகளின் அவலம், அவர்களுக்கான குடியுரிமை, எல்லைகள் கடந்த மனித நேயம் குறித்து புனிதன் பேசும் வசனங்கள் முக்கியமானவை, உருக்கமானவை, உள்ளத்தைத் தொடுபவை. அதே நேரம் மெதுவாக நகரும் காட்சிகளும் பொருத்தமில்லாத கிளைக்கதைகளும் திரைக்கதையைத் தடுமாற வைத்துள்ளன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
விஜய் சேதுபதி புனிதன் என்ற இலங்கைத் தமிழராக, அடையாளமற்ற அகதியின் மனநிலையைத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார். அவரை காதலிக்கும் மெடில்டாவாக வரும் மேகா ஆகாஷும், பாதிரியாராக வரும் ராஜேஷும் மனதில் பதிகிறார்கள். கனிகா உணர்வுபூர்வமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். காவல்துறை அதிகாரி ராஜனாக வரும் மகிழ் திருமேனி எதிர்மறை வேடத்தில் முத்திரை பதிக்கிறார். அமரர் விவேக்கை திரையில் பார்க்கும்போது மனம் விம்முவது என்னவோ உண்மை.
இசை மற்றும் இசைக்கலைஞன் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா அதிகம் உழைத்திருப்பது தெரிகிறது. படத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அவரின் இசை படத்தை தாங்கிப் பிடிக்கிறது.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது. குறிப்பாக இலங்கையில் நடந்த போர் காட்சிகளை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளின் துயர வாழ்வையும், சொல்லில் விவரிக்க முடியாத அவர்களது வலியையும் பதிவு செய்த வகையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மிக மிக முக்கியமான படம். அனைவரும் பார்ப்பது அவசியம்!