உலக பசித்தவர்கள் தினம்: ஏழைகளுக்கு வாகனம் மூலம் இலவச உணவு!
‘உலக பசித்தவர்கள் தினம்’ என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும்.
ஏழைகளின் பசியைத் தீர்க்க அரசு மற்றும் அரசியல் கட்சிகளை மட்டுமே நம்பியிருக்கத் தேவையில்லை; மக்கள் ஒவ்வொருவரும் சமூகத்தை நோக்கி தங்கள் பங்களிப்பை அளித்தால் பசித்தவர்கள் இல்லாத தேசத்தை உருவாக்கலாம் என்ற அடிப்படையில், ரெயின்ட்ராப்ஸ் என்ற தொண்டு நிறுவனம், ஏழைகளுக்கு வாகனம் மூலம் சென்று இலவச உணவு வழங்கியது.
ரெயின்ட்ராப்ஸ் மற்றும் ஆசிப் பிரியாணி உணவகம் இணைந்து உணவு வழங்கும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது சென்னை அன்ணாசாலை அருகே உள்ள ஆசிப் பிரியாணி உணவகத்தில் இருந்து இதற்கான வாகனம் புறப்பட்டது.
சமையல் கலை நிபுணர் தாமு, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, ஆசிப் உணவக நிர்வாக இயக்குனர் ஆகியோர் கொடியசைத்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த வாகனம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சாலையோரங்களில் பசித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கியது.
“ரெயின்ட்ராப்ஸ் இது போன்ற நிகழ்சிகளை நடத்துவது இது முதல் முறையல்ல. விருந்தாளி என்ற திட்டத்தின் மூலம் வாரந்தோறும் வாகனம் மூலம் சாலையோர மக்களின் பசியை தீர்த்து வருகிறது. உலக பசித்தவர்கள் தினத்தை முன்னிட்டு இம்முறை அதிக அளவிலான மக்களுக்கு உதவும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார் ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால்.