”முஸ்லிம் உருவாக்கிய ‘பாரத் மாதா கி ஜே’ முழக்கத்தை பாஜக கைவிடுமா?” – கேரள முதல்வர் கேள்வி!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து மார்க்சிஸ்ட் சார்பில் கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:-
‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்தை அஜிமுல்லா கான் என்ற முஸ்லிம் உருவாக்கினார். ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதல்முறையாக அபித் ஹாசன் என்ற முஸ்லிம் எழுப்பினார். முஸ்லிம்கள் உருவாக்கியதால் இரு முழக்கங்களையும் சங்பரிவார் அமைப்புகள் கைவிடுமா?
முகலாயர் ஆட்சிக் காலத்தில் மன்னர் ஷாஜகானின் மகன் தாரா, சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 50 உபநிடதங்களை பெர்சிய மொழியில் மொழிபெயர்த்தார். இதன் காரணமாகவே இந்திய புராணங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதை யாராலும் மறுக்க முடியாது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக காங்கிரஸ் தீவிரமாக போராடவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களே சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.