ஆரோக்கிய அரசியல் நோக்கி அதிமுக – திமுக: மாற்றத்துக்கு யார் காரணம்?

தமிழகத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றத்துக்கான குரல் எழுந்தது. பாமக முன்வைத்த மாற்றம், மக்கள் நலக் கூட்டணி முன்னெடுத்த மாற்றம் முதலானவற்றைத் தாண்டி, இணையத்தில் தீவிரம் காட்டும் தமிழ் நெட்டிசன்களின் பதிவுகளில் மாற்றத்துக்கான குரல் வலுவாக ஒலித்து வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுகளும், ட்விட்டர் ட்வீட்களும், வாட்ஸ்ஆப் மீம்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தை முற்றிலும் தகர்த்திருக்கிறது தற்போதைய அரசியல் சூழல்.

‘மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி’ என்ற பாமகவின் கோஷம் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை என்பதும், மாற்று அரசியல் என்ற கோஷத்துடன் தேர்தல் காலத்தில் கரம் கோத்த மக்கள் நலக் கூட்டணியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டின. ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட வெறும் 16 இடங்களை மட்டுமே கூடுதலாகக் கொடுத்து அதிமுகவை ஆட்சியில் அமர்த்தினார்கள் தமிழக வாக்காளர்கள். எதிரணியான திமுகவுக்கு மூன்று இலக்க எண்ணிக்கைக்கு இரண்டு மட்டுமே குறைவாக, அதாவது 98 இடங்களைத் தந்தார்கள். ஆட்சியில் மீண்டும் அமர்ந்தவர்களுக்கும், குறைந்த எண்ணிக்கையில் கோட்டையை விட்டவர்களுக்கும் ‘அலாரம்’ ஆகவே இந்த மாற்றத்தைப் பார்க்கலாம்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, ‘இலவச’ வாக்குறுதிகள் முதலான காரணிகளைக் கடந்து தமிழகத்தில் இதுபோன்ற ஒரு மக்கள் தீர்ப்பு எழுதப்படுவதற்கு அடித்தளம் இட்டது, கடந்த 10 ஆண்டுகளில் நெட்டிசன்களின் செயல்பாடுகளும் மிக முக்கியக் காரணம் என்றால் அதை உணர்ந்துதான் ஆகவேண்டும்.

இலவசங்களை ஒழிக்கும் முயற்சி:

தமிழ் இணையச் சூழலில், சமூக – அரசியல் சார்ந்து எழுதும் நெட்டிசன்களில் பெரும்பாலானோரும் இலவசங்களுக்கு எதிராக அவ்வபோது குரல் கொடுத்து வந்ததை கவனிக்க முடிந்தது. குறிப்பாக, தேர்தல் காலங்களில் ஒரு விழிப்புணர்வு இயக்கம் போலவே நடந்தது. இலவசங்கள் என்பதும் ஒரு வகையில் ஏமாற்று வேலைதான் என்பதற்கு மக்களுக்கு உணர்த்தும் வகையில், விரிவான அலசல் கட்டுரைகளும், ஒரு வரிப் பதிவுகளும், நகைச்சுவைத் தெறிப்புகளும், கலாய்ப்பு மீம்களும் கொட்டப்பட்டன.

தொடர்ச்சியாக இதுபோல் இலவசங்களுக்கு எதிராக நெட்டிசன்கள் குரல் கொடுத்ததன் எதிரொலியாக, முதல்முறையாக கவர்ச்சிகர இலவச வாக்குறுதியை அளித்து, இந்தக் கலாச்சாரத்துக்கு அடித்தளம் அமைத்த திமுக இந்தத் தேர்தலில் தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு உரிய அளவில் இடம் தரவில்லை.

அதேநேரத்தில், அதிமுகவின் வாக்குறுதிகளில் வழக்கம்போல் ‘இலவசம்’ இடம்பெற்றிருந்தாலும், அந்த இலவசத்தின் பலன் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று பல பதிவுகளைப் பார்க்க முடிந்தது. அதிமுக அறிவித்த இலவசம் சார்ந்த வாக்குறுதிகள் வசீகரித்திருந்தால், அக்கட்சி இன்னும் கூடுதல் இடங்களிலோ அல்லது கூடுதலாக வாக்கு சதவீதத்திலோ வென்றிருக்குமே. ஆனால் அப்படி நடக்கவில்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான வாக்கு சதவீதம் என்பது வெறும் 1.1% தான் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அதேபோல், வாக்குக்குப் பணம் வழங்குவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை விட நெட்டிசன்கள் தங்கள் தெறிப்புகளால் மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தியதே அதிகம் என்று அழுத்தமாகச் சொல்லலாம்.

ஓங்கி ஒலித்த எதிர்ப்பரசியல்:

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என விரும்பிய நெட்டிசன்களில் ஒரு சிறிய பகுதியினர், மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக – தமாக அணிக்கு ஆதரவாக செயல்பட்டனர். அந்த அணியின் தேர்தல் அணுகுமுறைகளை ஆதரிக்கும் விதத்திலும், பல நேரங்களில் சமாளிக்கும் விதத்திலும் அவர்களது செயல்பாடுகள் இருந்தன.

அதேநேரத்தில், ‘மிக எளிதில் உங்களை நம்பிவிட மாட்டோம்’ என்பதில் தெளிவாக இருந்த நடுநிலை நெட்டிசன்களில் பலரும் தொடர்ச்சியாக அதிமுகவையும், திமுகவையும் தனித்தனியாக விமர்சிப்பதில் தீவிரம் காட்டினர். திமுகவின் கடந்த கால செயல்பாடுகளையும், அதிமுகவின் கடந்த ஆட்சி கால செயல்பாடுகளையும் முன்வைத்து பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டன. அதிகம் எழுதக் கூடியவர்கள் கட்டுரைகள் வடிவிலோ அல்லது நீண்ட பதிவுகளாகவோ எழுதினர். குறும்பதிவு வித்தகர்கள் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் நறுக்கென சுருக்கமான சொற்களால் குத்திக் கிழித்தனர். சம்பந்தப்பட்டவரே ரசித்துத் திருந்தத்தக்க மீம்களும் வலம் வந்தன.

இவர்களுக்கு மாற்று இவர்கள்தான் என்று காட்டுவதற்கு எவரும் இல்லாத நிலையிலும், அதிமுக – திமுகவுக்கு எதிரான அரசியலை நெட்டிசன்கள் தொடர்ந்து முன்னெடுத்தனர். அதிமுகவுக்கு எதிராக திமுகவும், திமுகவுக்கு எதிராக அதிமுகவும் சமூக வலைதளங்களில் ஆள் வைத்து கவன ஈர்ப்புகளில் ஈடுபட்டு வந்தாலும், நடுநிலை நெட்டிசன்களின் எழுத்துகளிலும் வெளிப்பாடுகளிலும் நிஜத்தன்மையை எளிதில் உணரக்கூடிய அளவிலேயே இருந்தன.

நெட்டிசன்களால் இவ்விரு கட்சிகளுமே இப்படி ஓர் எதிர்ப்பரசியலை சந்தித்தது, தமிழக வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் உயிருள்ள ஆளுங்கட்சியையும், மிக வலுவான எதிர்க்கட்சியையும் கோட்டைக்கு அனுப்பிவைப்பதற்கு உரிய விதத்தில் வாக்குகளைப் பிரித்துத் தந்திருக்கிறார்கள்.

மாற்றம் எனும் அச்சுறுத்தல்:

தமிழ் நெட்டிசன்களின் எழுச்சியையும் ஒரு முக்கியக் காரணியாகக் கொண்ட தமிழக மக்களின் தீர்ப்பு என்பது தமிழக அரசியல் மாற்றத்துக்கான அடித்தளம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை சம்பந்தப்பட்ட இரு பெரும் அரசியல் கட்சிகளுமே அச்சுறுத்தலாகவே அறிந்து விழிப்புணர்வு பெற்றுள்ளன என்பது தெளிவு.

‘மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து ஒன்றாக இணைந்து செயல்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் நம்பகத்தன்மையை வலுப்படுத்துமேயானால், அந்த அணி பக்கம் சாய்வதற்கு தமிழக மக்கள் தயங்கமாட்டார்கள்; அன்புமணியும் தொடர்ந்து கள அரசியலில் ஈடுபடத் தொடங்கினால், அவருக்கும் வாக்கு சதவீதத்தை மக்கள் உயர்த்தத் தயங்க மாட்டார்கள்; அல்லது, புதிய இயக்கம் உருவாகி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற இளம் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டால், அதன் பக்கம் மக்கள் சாய்ந்துவிடுவார்கள்’ என்பன போன்ற யதார்த்த நிலைகள்தான் இப்போது அதிமுகவையும் திமுகவையும் தங்களைத் தாங்களே மாற்றத்தை நோக்கிப் பயணிக்க வழிவகுத்துள்ளது.

ஆரோக்கிய அரசியல் நோக்கி…

நடுநிலை நெட்டிசன்களில் செயல்பாடுகளால் வலுவடைந்த எச்சரிக்கையையும் அச்சுறுத்தல்களையும் ஆராய்ந்து பார்த்ததன் எதிரொலியாகவே, அதிமுகவும் திமுகவும் இப்போது ஓர் இணக்கமானதும் ஆரோக்கியமானதுமான அரசியலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்கலாம். இதற்கு உதாரணமான சமீபத்திய நிகழ்வுகளின் சுருக்கமான வடிவம் இதோ:

மே 23, 2016:

* எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியில் தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் பங்கேற்கிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

* திமுகவுக்கு அழைப்பு விடுத்த அதிமுகவையும், அந்த அழைப்பை ஏற்ற திமுகவையும் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

* முதல்வர் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு சற்றே பின்வரிசையில் உட்கார இடமளிக்கப்பட்டது குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நெட்டிசன்களால் விமர்சனம் எழுப்பப்படுகிறது.

* திமுக தலைவர் கருணாநிதி, ”முதல்வர் பதவியேற்பு விழாவில், தேர்தலில் தோற்றுப்போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து, பிரதான எதிர்க்கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது. வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது” என்று காட்டமாக எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.

* கருணாநிதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் காரசாரமாகப் பேசப்படுகின்றன. அதேவேளையில், ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி ஒரு பதிவை இடுகிறார்:

”தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்” என்ற ஸ்டாலினின் பதிவுக்கு நல்ல வரவேற்பு.

மே 24, 2016:

* முதல்வர் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிடுகிறார். அதில், “கடந்த 23-ம் தேதி நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எம்எல்ஏக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் மு.க.ஸ்டாலின் அமர வைக்கப்பட்டதை நான் அறிந்தேன். பதவியேற்பு விழாவில் மரபு அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை பொதுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன். எனவே, இருக்கை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பதை அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால், மரபுப்படியான விதிகளை தளர்த்தி அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காக அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார்.

* முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறையைக் கண்டு சிட்டிசன்களும் நெட்டிசன்களும் வியப்படைகிறார்கள். அதிமுகவும் திமுகவும் இணக்கமான அரசியல் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதை வரவேற்கிறார்கள். அதேநேரத்தில், தங்கள் இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் மாற்றாக இருக்க வேண்டுமே தவிர, தங்களைத் தவிர்த்துவிட்டு மாற்றத்தை நோக்கி தமிழக மக்கள் சென்றிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இப்படியான அணுமுறை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற கருத்துகளும் பதிவாகின.

எது எப்படி இருந்தாலும், ஒரு சிறு நகர்வுக்கும் ஆயிரம் கோணங்களில் சிந்தித்து, அதைக் கருத்துகளாக மக்களிடையே பரப்பக்கூடிய நெட்டிசன்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதுதான், ஆரோக்கிய அரசியல் நோக்கி அதிமுகவும் திமுகவும் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு காரணமாகி இருக்கிறது என்பதும் பதிவு செய்யப்பட வேண்டிய உண்மை.

கட்டுரையாளர்: கீட்சவன்