யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?

அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தைச் சேர்ந்த இந்தியரான / குஜராத்தியரான தீபக் பாண்ட்யாவுக்கும் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த உர்சுலின் போனிக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் கடைக்குட்டிதான் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவைக் குறிக்கும் விதமாக சமோசாவையும் ஸ்லோவேனியாவைச் சுட்டும் வகையில் அந்த நாட்டுக் கொடியையும் விண்வெளிக்கு சுனிதா எடுத்துச் சென்றார்.
பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்கக் கப்பல் படையில் விமான ஓட்டியாகப் பணியாற்றினார். ஆகஸ்ட் 1998இல் நாசாவால் தெரிவு செய்யப்பட்டு விண்வெளி வீராங்கனையாகப் பயிற்சியைத் தொடங்கினார்.
டிசம்பர் 9, 2006இல் பணிக்குழு 14இன் உறுப்பினராக விண்வெளிக்குச் சென்று விண்வெளி நிலையத்தில் சேர்ந்தார். பூமிக்குத் திரும்பாமல் அடுத்த பணிக்குழு 15இலும் நீடித்து பங்கெடுத்து மொத்தம் 192 நாள்கள் விண்வெளியில் பணியாற்றி 2007 ஜூன் 22இல் பூமிக்குத் திரும்பினார்.
இரண்டாவது முறையாக மறுபடி பணிக்குழு 32இன் பகுதியாக 2012 ஜூலை 15இல் விண்வெளி நிலையத்துக்குப் பயணம் செய்த சுனிதா, மறுபடி அடுத்த பணிக்குழு 33லும் இணைந்து 2012 நவம்பர் 19 அன்று பூமிக்குத் திரும்பினார்.
இதன் பின்னர் போயிங், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் விண்கலங்களை ஓட்டும் பயிற்சியைப் பெற்றார். இதன் நீட்சியாகத்தான் ஸ்டார்லைனர் விண்கலத்தைச் சோதனையோட்டம் செய்ய மூன்றாவது முறையாக 59 வயதான சுனிதா கடந்த ஜூன் 2024இல் விண்வெளிக்குச் சென்றார்.
இதுவரை விண்வெளி வீரர், வீராங்கனைகள் அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு விண்கலங்களில் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆனால் சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் ஷட்டில், சோயூஸ், போயிங் ஸ்டார்லைனர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஆகிய நான்கு வெவ்வேறு விண்கலங்களில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.
என்ன செய்தார் சுனிதா வில்லியம்ஸ்?
- எதிர்காலத்தில் நீண்ட நாள்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டால் விண்வெளியில் பயிர்த் தொழில் செய்து உணவை உற்பத்தி செய்ய முடியுமா என ஆய்வு செய்ய லெட்யுஸ் எனப்படும் கீரைச் செடியை வளர்த்து ஈர்ப்பு விசையின் இழுவை அற்ற விண்வெளியில் தாவர வளர்ச்சி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
- ஆவி பறக்கும் சூடான உணவிலிருந்தும் வியர்வை மூலம் ஆவியாகும் நீர் விண்வெளி நிலையத்தின் காற்றில் கலந்துவிடும். இந்த நீரைப் பிரித்து எடுக்கும் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்தக் கருவியைப் பரிசோதனை செய்துபார்த்தார்.
- ரோடியம் உயிரி உற்பத்திப் பரிசோதனையில் விண்வெளி நிலையத்தில் ஈஸ்ட் போன்ற பாக்டீரியா வளர்ச்சி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கு கொண்டார். விண்வெளி நிலையத்தின் உள்ளே சுவர்களில் வாழும் நுண்ணுயிரிகளை இனம் கண்டு சோதனை செய்தார்.
- பதப்படுத்தி நீண்ட நாள்கள் வைக்கப்பட்ட உணவில் ஊட்டம் குறையும். ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி உணவில் உள்ள வைட்டமின்கள் போன்ற ஊட்டச் சத்துகளைத் தயாரிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளில் ஈடுபட்டார்.
- இப்படிச் சிறிதும் பெரிதுமாக 150-க்கும் மேற்பட்ட அறிவியல் தொழில்நுட்பப் பரிசோதனைகளில் சுமார் 900 மணி நேர ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்.