யார் இந்த ஓப்பன்ஹைமர்…?
கிறிஸ்தோபர் நோலானின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தையடுத்து மேற்கில் அநேகமாக அனைத்து சீரிய இதழ்களும் ஓப்பன்ஹைமர் குறித்துக் கட்டுரைகளை வெளியிடுகின்றன.
150 பக்கங்கள் கொண்ட அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைப் படித்துவிட்டுத்தான் நேற்று படுக்கைக்குச் சென்றேன்.
இயற்பியல் அறிஞரான ஹைமர் யூதர். கார்ல் மார்க்ஸின் காபிடல் மூன்று தொகுதிகளையும், லெனினது எழுத்துக்களையும் படித்தவர். அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈடுபாடு கொண்டவர். அதற்கு நன்கொடைகள் வழங்கியவர். அவரது மனைவியும், சகோதரனும், அவரது பல உறவினர்களும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்.
அவரது இயற்பியல் அறிவைக் கருதி, ஹிட்லரின் பாசிசத்தை எதிர்கொள்ள அவரும் ஒப்பி, அமெரிக்காவுக்காக உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கியவர் அவர்.
ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட பின், நாசிப்படைகள் சரணடைந்த பின், ஜப்பான் சரணடைய ஒப்புக்கொண்ட பின், ஹிரோசிமா-நாகசாகியில் அமெரிக்க அரசு அணுகுண்டு போட்டது. 4 இலட்சம் மக்கள் மரணமுற்றனர். இரண்டு இலட்சம் பேர் நோய்வாய்ப்பட்டனர். இன்றளவிலும் அங்கு அங்கஹீனர்கள் பிறக்கின்றனர்.
ஹைமர் அணுகுண்டுச்சோதனையை நடத்தியபோது அவரோ அவரது சக இயற்பியலாளர்களோ இத்தகைய தொடர் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை. பெரும் மனித மரணங்களைக் கண்ணுற்று அவர் ‘தான் பாவம் செய்துவிட்டதாக’ பொதுவெளியில் அறிவித்தார். பகவத்கீதையில் விஷ்ணு சொல்வதை மேற்கோள் காட்டி ‘இப்போது நான் உலகை அழிப்பவன்’ என்றார்.
அமெரிக்கா ஜப்பானில் போட்ட இரு குண்டுகளை விடவும் 1,000 மடங்கு அழிவுதரக்கூடிய ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதை ஹைமர் நிராகரித்தார். அவரை அகற்றிவிட்டு, ரஷ்யக் கம்யூனிசத்தைக் காட்டி ஹைட்ரஜன் குண்டை அமெரிக்கா தயாரித்தது. எதிர்வினையாக இரும்பு மனிதர் ஸ்டாலினது ரஷ்ய அரசு அமெரிக்க மிரட்டலை எதிர்கொள்ள ஹைட்ரஜன் குண்டு தயாரித்தது.
இன்று இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா என இவையனைத்தும் அணுகுண்டுகளைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா உலகெங்கிலும் அணுகுண்டு ஏவுதளங்களை அமைத்திருக்கின்றது. உலகின் மிக அதிகமான அணுகுண்டுகள் ரஷ்யா வசம் உள்ளன.
அணு ஆயுதப்போர் மூளுமானால் உலகம் முழுக்க அழியும்.
ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க மறுத்த ஹைமர், உலக நாடுகளுடன் புரிந்துணர்வுக்கு அமெரிக்கா வரவேண்டும் என்றார். ‘அழிவை நாம் கொண்டிருக்கிறோம், நம்பிக்கையின்மை நம்மைச் சூழ்ந்திருக்கிறது’ என்றார்.
பின்னாளில் அமெரிக்க அரசு ஹைமரை அவரது கம்யூனிசக் கடந்த காலத்தை முன்னிறுத்தி ’தேசவிரோதி’ என்றது. உளவுத்துறை அவரை வேட்டையாடியது. அவர் ’ரஷ்ய உளவாளி’ என விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ’அமெரிக்கப் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்’ என முத்திரை குத்தப்பட்டார்.
அணுகுண்டை உருவாக்கிய ஓப்பன்ஹைமர், தொண்டைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, அணு ஆயுத எதிர்ப்பாளராக 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள் தனது 62 ஆம் வயதில் மரணமுற்றார்.
Yamuna Rajendran