ஒரு ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கேட்க தயாராகும் வாக்காளர்கள்!
“தேர்தல் களம் குழப்பமாக இருக்கிறது. எப்படி முடிவெடுக்கப் போகிறீர்கள்?” என்று காமன்மேன் ஒருத்தரிடம் கேட்டபோது, அவர் தேர்ந்தெடுப்பதற்கான சூத்திரத்தை எளிமையாக விளக்கினார். “போனமுறை எங்கள் பகுதியில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இந்த முறை களம் சூடாக இருப்பதால், டிமாண்ட் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் இல்லாமல் யாருக்கும் ஆதரவு தருவதாக இல்லை. இந்த முறை குறைவான பணத்தைக் கொடுத்து ஏமாற்றும் நோக்கத்தோடு வருபவர்களைத் துரத்திவிடலாம் என பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார் அலட்டிக் கொள்ளாமல்.
அவர் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? கட்சிகள் கார்பரேட் கம்பெனி மயமாகி பல்லாண்டுகள் ஆகிவிட்டன. 1957 குளித்தலையில், முன்பிருந்த இரண்டு ரூபாய் என்று துவங்கி, திருமங்கலம், ஸ்ரீரங்கம் என்று வரும்போது இரண்டாயிரம் ரூபாய் என ஓட்டுக்குக் காசு கொடுத்துப் பழக்கப்படுத்தியும் வைத்திருக்கின்றன. தவிர, கட்சிகள், அக்கட்சிகளின் ஆதரவு தொழிலதிபர்கள், அவர்களுக்கான லாபிகள், திட்டங்கள் என மிகப் பெரிய பொருளாதாரமே இயங்குகிறது.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த தன்னுடைய மைத்துனன், கட்சியில் சேர்ந்த இரண்டு வருடத்தில், ஸ்கார்ப்பியோவில் செல்வதையும் காமன்மேன் உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த மிகப் பெரிய பொருளாதாரத்தில் தன்னுடைய பங்கை அவர் இப்போது குற்றவுணர்ச்சி இல்லாமல் ‘டிமாண்ட்’ செய்து கேட்டுப் பெறலாம் என்கிறார்.
“ஓட்டுக்குப் பணம் பெற்றால் தண்டனை என்றெல்லாம் பேசுகிறார்களே” என்றபோது, “கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு பங்கு தராமல் இருப்பது துரோகம் இல்லையா?” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் காமன்மேன்!
– சரவணன் சந்திரன்
எழுத்தாளர்