சாத்தூர் தொகுதியில் சசிகலா போட்டி?

அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்பு உள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அவரது தோழி வி.கே.சசிகலா, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். அடுத்து, அவர் முதல்வர் ஆவதற்கு வசதியாக, சட்டப்பேரவை தொகுதி ஒன்றில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவார் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா காலமானதால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி சாத்தூர் தொகுதியாகும். எனவே, சாத்தூர் தொகுதியில் சசிகலா போட்டியிட்டு, ஆர்.பி.உதயகுமாரிடம் தேர்தல் பணிகளை ஒப்படைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என சசிகலா தரப்பு கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.