வித்தையடி நானுனக்கு – விமர்சனம்

இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது ‘வித்தையடி நானுனக்கு’.

முன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத். தன்னைப் போல மகளையும் நடிப்பில் களமிறக்க அம்மா நினைக்க, மகளோ தனக்கு நடிப்பு வரவில்லை என முதல் நாள் ஷூட்டிங்கிலேயே கோபித்துக்கொண்டு காரில் கிளம்பி ஏதோ ஒரு இடத்துக்கு செல்வதாக படம் ஆரம்பிக்கிறது. வழியில் கார் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட, அந்த வழியாக வரும் ராமநாதன், சௌராவுக்கு லிப்ட் கொடுத்து தனது காட்டு பங்களாவுக்கு அழைத்து செல்கிறார்..

அங்கே போனபின் ராமநாதனுடன் நட்பாக பழகும் சவுராவுக்கு, தனது அம்மாவை அறிமுகம் செய்த இயக்குனர் தான் அவர் என்பதும் தன அம்மாவை அவர் ஒருதலையாக காதலித்தார் என்பதும் தெரியவருகிறது.. ஆனால் மறுநாள் காலை முதல் ராமநாதனின் குணாதிசயம் மாற ஆரம்பிக்கிறது.. சௌராவின் சின்னச்சின்ன அலட்சியமான செயல்பாடுகளை கடுமையாக கண்டிக்கிறார். அது பிரம்பால் அடிக்கும் அளவுக்கு செல்கிறது. அதனால் கோபமான சௌரா அவரது நடவடிக்கையை எதிர்த்து அந்த பங்களாவைவிட்டு வெளியேற நினைக்கிறார்.

ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை போகப்போக புரிந்துகொள்ளும் சௌரா, கிட்டத்தட்ட ராமநாதனிடம் ஒரு கைதி மாதிரி சிக்கிக்கொள்கிறார்.. அவர் சொன்னால் அழுகிறார். சிரிக்கிறார்.. சுபாவத்தில் நல்ல மனிதர் போல தோன்றும் ராமநாதன் இப்படி சைக்கோத்தனமாக நடந்துகொள்ள காரணம் என்ன..? அவரிடம் இருந்து சௌராவால் தப்பிக்க முடிந்ததா..? இதற்கு பதில் சொல்கிறது டிவிஸ்ட்டான க்ளைமாக்ஸ்.

படத்தின் இயக்குனரான ராமநாதன்.கே.பி தான் படத்தின் ஹீரோவும்கூட.. ஐம்பது வயதை தொட்ட ஒரு சீனியர் இயக்குனரின் தோற்றத்தையும் உடல்மொழியையும் வெகு இயல்பாக கொண்டுவந்து நிறுத்துகிறார். சௌராவுக்கு காரில் லிப்ட் கொடுத்து அவர் அழைத்துச்செல்லும்போதே ஏதோ விபரீதத்துக்கு வித்திடுகிறார் என்பது புரிந்து விடுகிறது. ஆனால் சில நேரம் கண்ணியமாகவும், சில நேரம் கடுமையாகவும் அவர் நடப்பதற்கான காரணம் புரியாமல் குழம்பி அதற்கான விடை கிளைமாக்ஸில் தெரியவரும்போது உண்மையிலேயே ‘அட’ என ஆச்சரியப்பட வைக்கிறார்..

கதாநாயகி சௌரா சையத் தமிழ் சினிமாவுக்கான எந்த இலக்கணங்களும் இல்லாத ஒரு நாயகியாக இருந்தாலும், இந்த கதையுடனும் அவரது கதாபாத்திரத்துடனும் அவ்வளவு இயல்பாக பொருந்தி விடுகிறார்.. எப்போதும் தண்ணி அடித்தது போல ஒருவிதமான போதையுடன் அவர் பேசுவது, அதுவும் ஆங்கிலத்தில் பேசுவது தான் நம்மை சிரமப்படுத்துகிறது.. ஆனால் இடைவேளைக்குப்பின் வரும் த்ரில் காட்சிகளால் அதைக்கூட பொருட்படுத்தாமல் நாம் ஒன்றி விடுகிறோம் என்பது திரைக்கதையின் பிளஸ்.

வித்தையடி நானுனக்கு’ என்கிற அழகான தமிழ் தலைப்பிலேயே கதையை ஒளித்து வைத்து படம் முழுதும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராமநாதன் கேபி. ஒரே வீடு, அதில் இரண்டே கதாபாத்திரங்கள் என்பது உண்மையிலேயே ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் போரடிக்க ஆரம்பித்தாலும், படம் த்ரில்லர் மூடுக்கு மாறியபின் அந்தக் குறை பெரிதாக தெரியவில்லை.

 படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு ‘எனத் தொடங்கும் பாடலுக்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளார் விவேக் நாராயண். படத்தில் பின்னணி இசை, இரண்டு ஆட்களுடன் சேர்ந்து கண்ணுக்கு தெரியாத மூன்றாவது ஆளாக பயணித்து நம்மை அவ்வப்போது மிரட்டி நகம் கடிக்கவும் வைக்கிறது.

முதல் பாதியில் இருவர் சம்பந்தமான உரையாடலின் நீளத்தை குறைத்திருக்கலாம். அல்லது ஆங்கிலத்தை குறைத்து தமிழில் இன்னும் வசனங்களை மேம்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது..

வித்தையடி நானுனக்கு – புது முயற்சி!