விசித்திரன் – விமர்சனம்

நடிப்பு: ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி, பகவதி பெருமாள், இளவரசு, மாரிமுத்து மற்றும் பலர்
இயக்கம்: பத்மகுமார்
தயாரிப்பு: பாலா
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்
மக்கள் தொடர்பு: நிகில்
மருத்துவக் குற்றங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லராகப் புனையப்பட்ட ‘ஜோசப்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் மறுஉருவாக்கம் (ரீமேக்) தான் இந்த ’விசித்திரன்’.
நாயகன் ஆர்.கே.சுரேஷ் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தவர். பெரிய போலீஸ் அதிகாரிகள் கூட கண்டுபிடிக்க இயலாத குற்றச்செயல்களை திறமையாக துப்பறியக் கூடிய நுண்ணறிவு பெற்றவர். ஆனால், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தன் மகளின் திடீர் மரணம், மனைவி பூர்ணா விவாகரத்து பெற்று பிரிந்து சென்றது போன்ற துயரங்களால் மனம் உடைந்த ஆர்.கே.சுரேஷ், தன் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, மதுபோதைக்கு அடிமையாக இருந்து வருகிறார். எனினும், அவர் வேலையை விட்ட பின்பும், அவருடைய புலனாய்வு நுண்ணறிவை போலீஸ்துறை அவ்வப்போது பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆர்.கே.சுரேஷை விவாகரத்து செய்துவிட்டுப் பிரிந்து சென்ற அவரது முன்னாள் மனைவி பூர்ணா, சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்து உயிரிழக்கிறார். மகளின் மரணத்தைப் போலவே பூர்ணாவின் மரணமும் நிகழ்ந்திருப்பதால் ஆர்.கே.சுரேஷுக்கு சந்தேகம் வருகிறது. உடனே தனது பாணியில் புலனாய்வில் இறங்கும்போது, பூர்ணாவை யாரோ திட்டமிட்டு விபத்தில் சிக்க வைத்திருப்பது தெரிய வருகிறது.
விபத்தை ஏற்படுத்தியது யார்? எதற்காக செய்தார்கள்? பூர்ணா மற்றும் மகளின் மரணங்களுக்கு இடையே இருக்கும் தொடர்பு என்ன? என்பவற்றை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் ஆர்.கே.சுரேஷ், அவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது சஸ்பென்ஸும், பரபரப்பும் நிறைந்த மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் மிகுந்த பொறுப்புணர்வுடன், இயல்பாக, சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் வெவ்வேறு வயது உடையவராக வரும்போது, அந்தந்த வயதுக்கு ஏற்ப உடல் எடையைக் கூட்டியும், குறைத்தும் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். எத்தனை கனமான பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை நிச்சயம் அவர் சிறப்பாகச் செய்வார் என்ற நம்பிக்கையை இப்படத்தில் அவர் ஏற்படுத்தியுள்ளார்.
அவர் மனைவியாக வரும் பூர்ணா, தன் பாத்திரம் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் மதுஷாலினி. நாயகனின் போலீஸ் நண்பர்களாக வரும் இளவரசு, மாரிமுத்து, பூர்ணாவின் இரண்டாவது கணவராக வரும் பகவதி பெருமாள், கிறித்துவ பாதிரியாராக வரும் ஜார்ஜ் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
‘ஜோசப்’ மலையாளப் படத்தை இயக்கிய பத்மகுமார், அதன் ரீமேக்கான இந்த படத்தையும் இயக்கியிருப்பதால், கதையை சிதைக்காமல் அப்படியே எடுத்திருக்கிறார். உலகளாவிய உடலுறுப்பு கள்ளச் சந்தை நெட்வொர்க்கை மையமாகக் கொண்ட, இப்படத்தை சமூக பொறுப்புணர்வுடன், அதே நேரத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் ஜனரஞ்சகமாக உருவாக்கி, போரடிக்காமல் திறமையாக கொண்டு சென்றிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். படத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். வெற்றிவேல் மாகேந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு.
‘விசித்திரன்’ – ரசிக்கத் தக்கவன்!