விசிறி – விமர்சனம்

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், செக்ஸ் சாமியார் நித்தியானந்தாவின் பெண் சீடர்களுக்கு நிகராக, விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பரஸ்பரம் வண்டை வண்டையாக திட்டிக்கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. விஜய் – அஜித் விசிறிகளுக்கு இடையிலான இந்த மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘விசிறி’.

சென்னையில் வசிக்கிறான் ஒரு அஜித் ரசிகன். நண்பர்களோடு சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றித் திரிவதும், முகநூலில் அஜித் புராணம் பாடும் ஸ்டேடஸ் போடுவதும் தான் அவனுடைய அன்றாட வேலை. இவனுக்கும், மதுரையில் இருக்கும் விஜய் ரசிகன் ஒருவனுக்கும் அதே முகநூலில் மோதல் வெடிக்கிறது. இருவருமே நேரில் சந்தித்து பழி தீர்த்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், சென்னை வாழ் அஜித் ரசிகனை ‘பெண் ரசனை இல்லாதவன்’ என நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள். அதனால் எப்படியாவது ஒரு பெண்ணை “பிராக்கெட்” போட வேண்டும் என நினைக்கிறான். அச்சமயம் வெளியூரிலிருந்து புதிதாக ஏரியாவுக்கு வரும் நாயகியுடன் அவனுக்கு முதலில் மோதலும், பின்னர் நட்பும் ஏற்படுகிறது. அந்த நட்பை காதலாக உணர்கிறான். ஆனால், அவள் ஒரு விஜய் ரசிகை என அறிந்து அதிர்கிறான். எனினும், தானும் விஜய் ரசிகன் தான் என பொய் சொல்லி உறவை தொடருகிறான்.

இந்நிலையில், மதுரையில் இருந்துகொண்டு முகநூலில் சண்டை போடும் விஜய் ரசிகன், நாயகியின் அண்ணனாக சென்னை வந்து சேருகிறான். மோதல் ஏற்பட்டு, அடிதடி சண்டை ஆகிறது. அந்த சண்டையும் முகநூலில் வைரலாகிறது. போலீஸ் தலையிட்டு பைசல் செய்து வைக்க, நாயகியை அழைத்துக்கொண்டு மதுரைக்கு சென்றுவிடுகிறான் விஜய் ரசிகன்.

பெண்களை ஆபாசமாக படமெடுத்து, முகநூலில் பதிவேற்றப்போவதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் நாயகி எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கிறாள். அவளுக்காக அஜித் ரசிகனும், விஜய் ரசிகனும் ஒன்றிணைகிறார்கள். அது மட்டுமல்ல, அவ்விரு நடிகர்களின் ஒட்டு மொத்த ரசிகர் மன்ற ‘மறவர்’களையும் அவர்கள் ஒன்று திரட்டி, சமூகத் தீமையை ஒழித்துக் கட்டுகிறார்கள். சுபம்.

நாயகர்கள் ராஜ் சூர்யா, ராம் சரவணன் ஆகிய இருவரும் அஜித் – விஜய் ரசிகர்களாகவும், நாயகி ரமோனா விஜய் ரசிகையாகவும் நடித்திருக்கிறார்கள் என்பதை தவிர இவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதுபோல தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் படு அமெச்சூராக இருக்கிறது..

எந்த சினிமா நடிகனுக்கும் தானாக ரசிகர் மன்றங்கள் தோன்றி விடுவதில்லை. தனது புதுப்படம் வெளியாகும் நாளில் அதை கொண்டாடுவதற்காகவும், திரையரங்குகளில் ஓப்பனிங் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவும், அநியாய விலைக்கு டிக்கெட் வாங்குவதற்காகவும் அந்தந்த நடிகனே தனது உறவினன் அல்லது நண்பன் அல்லது விசுவாசி ஒருவனை ‘அகில உலக’ அல்லது ‘அகில இந்திய’ பொறுப்பாளனாக நியமித்து ரசிகர் மன்றம் தொடங்குகிறான். ரசிகர் மன்றத்தில் சேர்ந்தால், மன்றப் பதவி கிடைத்தால் ஊருக்குள் தனக்கு கெத்து என்று நினைக்கும் சினிமா வெறியன் அத்தகைய மன்றங்களில் தன்னை இணைத்துக்கொள்கிறான். அந்த நடிகனுக்கு நாடாளும் ஆசை வரும்போது, தனது ரசிகர் மன்றத்தையே கட்சியாக மாற்றி, அரசியலில் குதித்து, தமிழக அரசியலை அசுத்தம் செய்கிறான். (முதலில் மன்றம் தொடங்கிவிட்டு, பின்னர் கலைத்துவிட்டதாக அறிவிக்கும் நடிகன் கூட, அதன்பிறகு தன் பெயரால் இயங்கும் மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை. எதற்கும் இருக்கட்டும் என்ற நினைப்பில் பைக் ரேஸூக்கு போய் விடுகிறான்!)

இப்படி ஊழல்கட்சிகளுக்கு இணையாக தமிழகத்தை கேவலப்படுத்திக்கொண்டிருக்கும் ரசிகர் மன்றங்களை தோலுரித்துக் காட்டாமல், “ரசிகர் மன்றங்களைவிட்டு வெளியேறி, சமூக அக்கறை உள்ள கட்சிகளின் இளைஞர் அமைப்புகளில் போய் சேருங்கள்” என்று அறிவுரை கூறாமல், “மன்ற ரசிகர்கள் மோதலை கைவிட்டு, மன்ற ரசிகர்களாகவே பொதுச் சேவையில் இறங்க வேண்டும்” என இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வெற்றி மகாலிங்கம் போதனை செய்திருப்பது, விஜய் – அஜித் ரசிகர்களை தடவிக் கொடுத்து தன் பங்குக்கு அவர்களை சுரண்டும் சுயநல உத்தி தானே தவிர வேறு அல்ல.

‘விசிறி’ – புழுக்கம்!