பேட்டியால் வந்த வினை: தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷால் நீக்கம்!
நடிகரும் தயாரிப்பாளருமான விஷால், கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை நக்கலடித்தும், கடுமையாக விமர்சித்தும் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “எந்த நல்ல விஷயம் பேசி முடிவு பண்ணலாம்னு கூப்பிட்டாலும் சங்கத்துல யாரும் வர மாட்டேங்கிறாங்க. ஆனா, ‘சார், எனக்கு ஒரு பஞ்சாயத்து. அந்த ஹீரோ 50 லட்சம் பாக்கி வெச்சிருக்கார்’னு சொன்னா போதும். ‘வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்து பண்ணலாம்’னு உட்கார்ந்துடுறாங்க. இதுதான் பிரச்சனைகளுக்கு ஆரம்பப்புள்ளி.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்தாலே, தமிழ் சினிமா செழிப்பா இருக்கும்.
தற்போதைய நிர்வாகத்தை நாங்க 100 சதவிகிதம் மதிக்கிறோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த ஆக்கபூர்வமான வேலைகள் எதுவுமே நடக்கலை. எப்படி நடிகர் சங்கத்தை கையில எடுத்துக்க வேண்டிய ஒரு சூழல் வந்துச்சோ, அந்த மாதிரி ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்லயும் போட்டியிடுற சூழல் இப்ப வந்திருக்கு.
ஒவ்வொரு தயாரிப்பாளர்கள் மனசுக்குள்ளயும் இந்த எதிர்ப்பு உணர்வு இருக்கு. அது ஜனவரி மாசம் நிச்சயமா வெடிக்கும். அது 100 சதவிகிதம் உறுதி. ஏன்னா, தமிழ் சினிமா எங்க தாய்; சோறு போடுற தெய்வம். அதைக் காப்பாத்தணும்னா, எங்களுக்கு வேறு வழி இல்லை” என்று விஷால் கூறியிருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ”வார இதழ் ஒன்றுக்கு விஷால் அளித்த பேட்டி தயாரிப்பாளர் சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது.
மேலும், இதுபோல் தொடர்ந்து விஷால், சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்துகொண்டதைக் குறிப்பிட்டு, அவருக்கு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அன்று தயாரிப்பாளர் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்ப்பட்டது.
அதற்கு விஷால் அளித்த பதில் திருப்தியாக இல்லை. கடந்த 12-ம் தேதி அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில், செயற்குழு எடுத்த தீர்மானத்தின்படி, சங்க விதி எண் 14-Dயில் உள்ளபடி, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் விஷால் தயாரிப்பாளர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.