“சிவகார்த்திகேயன் புகார் மீது விரைவில் நடவடிக்கை!” – விஷால்

சிவகார்த்திகேயன் அளித்துள்ள புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

‘ரெமோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், “ரெமோ’ வெளியாகும் வரை பிரச்சனை. எவ்வளவு தான் பிரச்சனை கொடுப்பீர்கள். எவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருகிறேன். நானோ, தயாரிப்பாளர் ஆர்,டி.ராஜாவோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து படம் எடுக்க வரவில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்க வருகிறோம். அதற்கு எங்களை வேலை செய்ய விடுங்கள். கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். என்னையும் அவரையும் வேலை செய்ய விடுங்கள்” என்று கண் கலங்கினார்.

சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க பேசிய பேச்சு, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. நடிகர்கள் சிம்பு, மனோபாலா போன்றோர் ட்விட்டரில் தங்களுடைய ஆதரவை சிவகார்த்திகேயனுக்கு தெரிவித்தனர்.

சிவகார்த்திகேயன் பிரச்சனைக் குறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால், “சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன். சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சிவகார்த்திகேயன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என்பதை விஷாலின் இந்த பேட்டி உறுதி செய்துள்ளது.