விரூபாக்ஷா – விமர்சனம்
நடிப்பு: சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன், ராஜீவ் கனகலா, பிரம்மாஜி, ரவி கிருஷ்ணா, கமல் காமராஜு, சாய் சந்த், அஜய் மற்றும் பலர்
இயக்கம்: கார்த்திக் வர்மா தண்டு
ஒளிப்பதிவு: ஷாம்தத் சைனுதீன்
படத்தொகுப்பு: நவின் நூலி
இசை: அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு: ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா & சுகுமார் ரைட்டிங்ஸ்
வெளியீடு: ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.இ.ஞானவேல்ராஜா
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)
’அருந்ததி’ நினைவிருக்கிறதா? பல ஆண்டுகளுக்கு முன் அனுஷ்கா நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட அமானுஷ்ய திரைப்படம். இப்போது அதே ஜானரில், வித்தியாசமான கதையில், தெலுங்கில் உருவாகி, ஒரே வாரத்தில் ரூ.65 கோடியை வசூலித்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’விரூபாக்ஷா’. அது தமிழில் டப் செய்யப்பட்டு, இப்போது தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான சாய் தரம் தேஜ் நாயகனாகவும், தனுஷின் ‘வாத்தி’ படத்தில் நடித்த சம்யுக்தா மேனன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தில் சில குழந்தைகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள். அந்த ஊரில் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சி செய்யும் வெங்கடாசலபதி (கமல் காமராஜு) தான் குழந்தைகளின் மர்மச்சாவுக்கு காரணம் என்று கருதும் ஊர்மக்கள், அவரை அவரது மனைவியோடு சேர்த்து உயிரோடு எரித்துக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களது மகனான சிறுவன் பைரவாவை (ரவி கிருஷ்ணாவை) அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடுகிறார்கள்.
பல ஆண்டுகள் உருண்டோடியபின், அந்த கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் கலந்துகொள்ள வருகிறான் நாயகன் சூர்யா (சாய் தரம் தேஜ்). அவனுக்கு ஊர் தலைவர் (ராஜீவ் கனகலா) மகளான நாயகி நந்தினி (சம்யுக்தா மேனன்) மீது காதல் வருகிறது.
இந்த நிலையில் கோயில் கருவறைக்குள் ஒருவர் ரத்தம் கக்கி இறந்துபோகிறார். இதனால் கோயிலின் புனிதத் தன்மையைக் காக்க, எட்டு நாட்களுக்கு யாரும் கிராமத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார் பூசாரி (சாய் சந்த்).
அதன்பிறகும் சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். நாயகி நந்தினியையும், அந்த ஊர் மக்களையும் அமானுஷ்யமான பயங்கர ஆபத்து சூழ்கிறது.
தொடர் மரணங்களுக்கு என்ன காரணம்? நந்தினியின் பின்னணி என்ன? அவளை சூர்யாவால் காப்பாற்ற முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக்கதை.
நாயகன் சூர்யாவாக வரும் சாய் தரம் தேஜ், தனது கதாபாத்திரத்துக்குள் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு, அதற்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆத்மார்த்தமான காதல், அதிரடி ஆக்சன், உருக்கமான செண்டிமெண்ட் போன்ற எல்லாவித உணர்வுகளையும் தனது யதார்த்தமான நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்ப்படங்களில் நடிக்க புதிதாய் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார் என்று உறுதியாகக் கூறலாம்.
நாயகி நந்தினியாக வரும் சம்யுக்தா மேனன் முதல் பாதியில் அப்பாவிப் பெண்ணாக, அழகிய காதலியாகவும், இரண்டாம் பாதியில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஆக்ரோஷமான அச்சமூட்டும் பெண்ணாகவும் வருகிறார். அவருக்கு மிக மிக சவாலான பாத்திரம். அந்த சவாலை ஏற்று, பிரமாதமாக நடித்து, ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.
ஊர் தலைவராக வரும் ராஜீவ் கனகலா, டாக்டராக வரும் பிரம்மாஜி, வெங்கடாசலபதியாக வரும் கமல் காமராஜு, அகோரியாக வரும் அஜய், பூசாரியாக வரும் சாய் சந்த், பைரவாவாக வரும் ரவிகிருஷ்ணா என ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் கச்சிதமாக நடித்து, படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் தக்க வைக்க உதவியுள்ளார்கள்.
தீய சக்திக்கும், நல்ல சக்தியும் இடையே நடக்கும் பயங்கரப் போட்டியை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராகவும், சீட் நுனியில் உட்கார வைக்கும் திகில் ஜானர் படமாகவும் கொடுத்துள்ள இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு பாராட்டுக்கு உரியவர். ரசிகர்களை முழுக்க முழுக்க திகிலில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த அமானுஷ்ய திகில் கதையின் காட்சிகளுக்கு ஷாம்தத் சைனுதீனின் ஒளிப்பதிவும், அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் பலம் சேர்க்கின்றன.
’விரூபாக்ஷா’ – கோடை விடுமுறை கொண்டாட்டத்துக்கு ஏற்ற திகில் விருந்து!