வெள்ளத்தில் மட்டும் அல்ல, வெயிலிலும் மக்களை சாகடிக்கும் ஜெயலலிதா!

சில வாரங்களுக்குமுன் பெருவெள்ளம் பாதித்தபோது அதை தடுக்க முறையான முன்னேற்பாடுகளோ, தேவையான உடனடி நிவாரணப் பணிகளோ செய்யாமல் மக்களை சாகடித்த ஜெயலலிதா, தற்போது பிரசார பொதுக்கூட்டம் என்ற பெயரில் கொளுத்தும் கோடை வெயிலில் அப்பாவி மக்களை சாகடித்து வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திங்கட்கிழமை விருத்தாசலத்தில் கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதற்கான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலிருந்து காலையிலேயே பெண்கள் அழைத்துவரப்பட்டு பிரச்சார மேடை முன் வெயில் சுட்டெரிக்கும் வெட்டவெளியில் அமர வைக்கப்பட்டனர். ஜெயலலிதா பிற்பகல் 3 மணிக்குதான் மேடையை வந்தடைந்தார்.
கொளுத்தும் வெயிலை தாங்க முடியாத பெண்கள் குடிநீருக்கு அவதிப்பட்டனர். பலர் பசியோடு காத்திருந்தனர்.
ஜெயலலிதா மேடை ஏறியதும், அவரை பார்த்து கையசைத்த பெண்களும் ஆண்களும், பின்னர் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியேறத் தொடங்கினர். அப்போது வெளியேற இயலாமல் நெரிசலில் சிக்கி, பெண்கள் உட்பட 50 பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் அரியலூர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாகரன் (49) என்பவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
இந்த இருவரும் திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்ததாக ஜெயலலிதா இன்று கூறியிருக்கிறார்.
ஆனால், பாதுகாப்புக் கருதியும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் காவல்துறை சார்பில் பிரச்சாரத் திடலில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்ததால், மக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா மேடையில் தன் உரையை வாசித்துக்கொண்டிருந்ததால், மயக்கமுற்றவர்களை உடனடியாக என்ன செய்வது என்று தெரியாமல், அப்படியே தரையில் கிடக்க விட்டுவிட்டனர். ஜெயலலிதா பேசி முடித்த பிறகுதான் ஆம்புலன்ஸில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாமதம் காரணமாக இரண்டு அப்பாவிகளின் உயிர்கள் அநியாயமாக பறி போயிருக்கின்றன.
இச்சம்பவம் குறித்து கரிகாலன் என்பவர் தமது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பது:
ஹெலிகாப்ட்டர் இறங்குதளம், மேடை வரை கார் செல்ல தார்ச்சாலை, பத்து பதினைந்து அடி உயர மேடைக்கு ஏற எஸ்கலேட்டர் வசதி, டன் கணக்கில் ஏசி இவ்வளவும் செய்தவர்கள் பார்வையாளர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை.
மூன்று மணிக்கு வருபவரைப் பார்க்க பகல் 12 மணிக்கே அழைத்து வந்து அடைத்து வைத்தார்கள்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் வருத்தும் வெய்யிலிலிருந்து தப்பிக்க வழி இல்லாமல் பட்டியில் விலங்காய் அடைத்து வைக்கப்பட்டனர்.
இவர்களெல்லாம் ஏதோ அயல்தேசத்து மனிதர்களா? காடு கழனிகளில் களைவெட்டி கௌரவமாகப் பிழைப்பு நடத்தியவர்கள். எச்சில்களைத் தின்று பழகிய வட்டம் – மாவட்டங்கள், தங்கள் பதவி நிலைக்க குற்ற உணர்வே இல்லாமல் தங்கள் கிராமத்து சொந்தங்களை ரூ.300 காசுக்கும், ஒரு பிராந்தி பாட்டிலுக்கும், ஒரு பிரியாணி பொட்டலத்துக்கும் ஆசைகாட்டி அழைத்து வந்திருக்கிறார்கள்.
மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள் தங்களின் வெள்ளிக் காசுகளில் சிலவற்றை வீசி எறிந்து அப்பாவி சிவில் சமூகத்தை அழுக்காக்கிப் பார்ப்பதுதான் இந்த தேர்தல் சூதாட்டம். இதை விளையாடுபவர்கள் ராஜாக்களாகிறார்கள்; ராணிகளாகிறார்கள். பணயமாக்கப்படும் குடிமக்களோ ஜோக்கராகிவிடுகிறார்கள்.
நேற்றைய கூட்டத்தில் இருவர் மாண்டனர். இருபது பேர் காயமடைந்தனர். இந்த விஷயத்தை திமுக தவிர பிற ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன.
இந்த 45 டிகிரி வெய்யிலில் உங்கள் பலத்தை காட்ட, உங்கள் உளறல்களை கேட்க அப்பாவிகளை பலி வாங்காதீர்கள்.
ஆளுக்கொரு சேனல் வைத்திருக்கிறீர்கள். அதில் பேசுங்கள் போதும்.
நல்லெண்ண வெளக்கெண்ண வேப்பெண்ண
நாங்க நாசமா போனா உமக்கென்ன!
# # #
சௌமியன் வைத்தியநாதன் என்பவரின் பதிவு:
”இந்த தாயால் மட்டுமே உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும்’ – ஜெயலலிதா.
அட போம்மா… இத நீயி பேசிட்டிருக்கற நேரத்துல, ஒரு மடக்கு தண்ணிய, உம் முன்னாடி மணிக்கணக்கா உச்சி வெய்யில்ல காய்ஞ்சு அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாம உட்கார்ந்திருக்குற பெண்டு பிள்ளைங்களுக்கு கொடுத்திருந்தால் நாலு உசுரு அம்போன்னு போயிருக்குமா???!!!
இன்னுமா இந்தம்மா பேச்ச மக்கள் நம்புறாய்ங்க?!
தந்தி, புதியதலைமுறை, நியூஸ் 7 மாதிரி டீவில எல்லாம் இது பத்தி ஏதாவது காமிச்சாய்ங்களா? விவாதம் வச்சாங்களா? செத்துப்போனவங்க குடும்பம், குட்டிய பேட்டி எடுத்து போட்டாங்களா? மயங்கி விழுந்து ஐசியூ-வுல இருக்குற ஏராளமானவங்கள போய் லைவ்வா காமிச்சாங்களா? இதுக்கான காரணம் என்னான்னு அலசி ஆராய்ஞ்சாங்களா? அதுக்கு காரணமானவங்கள அடையாளம் காட்டினாங்களா?
நான்காம் தூண்கள்ன்னு சொல்லிக்கிட்டு இப்புடி நாலாந்தரமா நடந்துக்குற இந்தமாதிரி ஊடகங்களை மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டும். இந்த ஊடகங்கள் தமிழகத்தின் நச்சு வாயுக்கள்.
மோசமான ஆட்சியாளரைவிட, அவர்களை பாதுகாக்கும் ஊடகங்கள் கொடூரமானவர்கள். உண்மையான நடுநிலை பொதுமக்கள் இதை உணர வேண்டும்..!”