வேலையில்லா பட்டதாரி 2 – விமர்சனம்
வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் – அமாலா பால் இந்த பாகத்தில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ், சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் என தனது குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அக்கறை காட்டும் குடும்பப் பெண்ணாக அமலாபால் வருகிறார். இவ்வாறாக குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமலா பால், குடும்பத்திற்கு எது தேவை, தேவையில்லை என்பதை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.
இதுஒருபுறம் இருக்க குடும்பப் பொறுப்புகளை தானே ஏற்றுக் கொள்ளும் தனுஷ், கடைசியாக கிடைத்த கட்டிட பணியை சரியாக செய்து கொடுத்ததால், அவர் பணிபுரியும் கம்பெனிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில், தென்னிந்தியாவில் கட்டிட தொழிலில் சாதனை படைப்போருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் அனைத்து வகையான விருதையும் தென்னிந்தியாவிலேயே பெரிய கட்டிட நிறுவனமான கஜோலின் கட்டிட நிறுவனம் கைப்பற்றுகிறது. ஆனால் சிறந்த பொறியாளருக்கான விருது மட்டும் தனுஷ்க்கு கிடைத்து விடுகிறது.
அனைத்திலும் தனது நிறுவனம் தான் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் கஜோல், சிறந்த பொறியாளருக்கான விருது வாங்கிய தனுஷை தன்னுடைய கம்பனெிக்கு இழுக்க முயற்சி செய்கிறார். இயல்பாகவே அங்கு செல்ல விரும்பாத தனுஷ், கஜோலின் திமிர் பேச்சால் அவருடன் பணிபுரிய மறுக்கிறார். இந்நிலையில், தனுஷை வேலையை விட்டு தூக்க வேண்டும் என்று அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு கஜோல் இடைஞ்சல் கொடுக்கிறார்.
கஜோலின் இடைஞ்சலால் அந்த கம்பெனியில் ஒப்பந்தமாகிய சில கட்டிட பணிகளும் கைவிட்டு போகிறது. இதையடுத்து அந்த கம்பெனியின் தலைமை அதிகாரி கஜோலை சென்று பார்க்கிறார். அவரிடம் தங்கள் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது, தனுஷை வேலையில் இருந்து நீக்கினால், அவரது கம்பெனியில் இருந்து கைவிட்டு போன அனைத்து பணிகளையும் திரும்ப கிடைக்க செய்வதாக கஜோல் உறுதி அளிக்கிறார். ஆனால் தனுஷை வேலையில் இருந்து நீக்க முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி உறுதியாக தெரிவித்து விட்டு சென்றுவிடுகிறார்.
இந்நிலையில், தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று முடிவு செய்யும் தனுஷ், தனது வேலையை ராஜினாமா செய்கிறார். மேலும் கஜோலை நேரில் சென்று பார்க்கிறார். அப்போது அவரை கஜோல் தனது கம்பெனியில் சேரச் சொல்ல, கஜோலின் கம்பெனியில் சேர மறுக்கும் தனுஷ் தனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. வேலையில்லா பட்டதாரி என்ற அடையாளத்துடனே தான் இருக்க விரும்புகிறேன். இனிமேல் தன்னை கஜோலால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
இதையடுத்து, வேலையில்லா பட்டதாரி என்ற தனது அடையாளத்துடன் தனுஷ் என்ன செய்தார்? கஜோல் அவருக்கு மீண்டும் தொல்லைகளை கொடுத்தாரா? கஜோலுக்கு எதிராக தனுஷ் என்ன செய்தார்? வேலையில்லா பட்டதாரியாக எப்படி சாதிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தனுஷ் தனக்கே உரிய இயல்பான நடிப்பால் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கிறார். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் ஒரு வேலையில்லா பட்டதாரியாகவே தனுஷ் ரசிக்க வைக்கிறார். மனைவியிடம் அடி வாங்குவதிலும், கஜோலை எதிர்த்து நிற்பதிலும் தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அமலா பால் ஒரு மனைவியாகவும், தனது குடும்பத்தின் மீது அக்கறை கொள்ளும் குடும்ப பெண்ணாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். தனுஷ் – அமலா பால் இடையேயான காதலும், பந்தமும் படத்தில் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. தனது கணவனை திட்டுவதிலும், குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுவதிலும் அமலா பால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மின்சார கனவு படத்திற்கு பிறகு 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடித்திருக்கும் கஜோல், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் கட்டிட தொழிலில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற கர்வத்துடன் மிரள வைத்திருக்கிறார்.
விவேக் தனக்கே உரிய ஸ்டைலில் சிரிக்க வைக்கிறார். சமுத்திரக்கனி தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரிஷிகேஷ், மீரா கிருஷ்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரிது வர்மா சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.
குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பாக இயக்கி இருக்கிறார். கூட்டுக் குடும்பம், அன்பு, பாசம், காதல், அக்கறை, பிரச்சனை எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். கஜோல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கே பலத்தை கூட்டியிருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவில் சமீர் தாஹீர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.
மொத்தத்தில் `வேலையில்லா பட்டதாரி 2′ பொழுதுபோக்கு.