மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து திடீர் தகுதி நீக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகளிர் மல்யுத்தம், 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 50 கிலோவுக்கு மேல் சில கிராம்கள் கூடுதல் எடையுடன் இருந்தார்” எனத் தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பேசினார்.
மக்களவையில் பேசிய அவர், “வினேஷ் போகாத்தின் எடை இன்று 50 கிலோ 100 கிராம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, பாரிஸில் இருக்கிறார். அவருடன் பிரதமர் பேசியுள்ளார். தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனிப்பட்ட உதவியாளர்கள் உள்பட வினேஷ் போகாத்திற்கு எல்லா வசதிகளையும் அரசு செய்து கொடுத்தது” என்று கூறினார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து இந்தச் சாதனையை அவர் படைத்திருந்தார். இந்த நிலையில், அவர் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால், அவரது பதக்க கனவு பறிபோயுள்ளது.
“வினேஷ் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பது காலையில் கண்டறியப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என இந்திய அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.