விமானம் – விமர்சனம்
நடிப்பு: சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின் (சிறப்பு தோற்றம்), ராகுல் ராமகிருஷ்ணா, அனசுயா பரத்வாஜ், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலர்
இயக்கம்: சிவபிரசாத் யனலா
ஒளிப்பதிவு: விவேக் கலேபு
படத்தொகுப்பு: மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ்
இசை: சரண் அர்ஜுன்
தயாரிப்பு: கிரண் கொரப்பட்டி – ஜீ ஸ்டூடியோஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)
வறுமைச் சூழலில் வாழும் ஒரு மாற்றுத் திறனாளியின் 9 வயது மகன் ஆகாய விமானத்தில் பறக்க ஆசைப்படுகிறான். அதற்கு 10ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. மறுபுறம், செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் ஒரு பாலியல் தொழிலாளியிடம் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறான். அதற்கு ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அந்த இருவரின் ஆசை நிறைவேறியதா என்பது தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாகியிருக்கும் ‘விமானம்’ திரைப்படத்தின் ’பேசிக் ஸ்டோரி’.
போலியோ போன்ற ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு ஒரு காலை பயன்படுத்த இயலாத மாற்றுத் திறனாளியாக இருப்பவர் வீரய்யா (சமுத்திரக்கனி). இடம் பெயர்வதற்கு ஊன்றுகோல்களையும், மூன்று சக்கர வண்டியையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் அவர், சென்னையில் பரம ஏழைகள் வசிக்கும் குடிசைப்பகுதி ஒன்றில் கட்டணக் கழிப்பறை நடத்தி, அதில் வரும் வருமானத்தில் சிரம ஜீவனம் நடத்தி வருகிறார். தாயில்லாப் பிள்ளையான தனது ஒரே மகனான ராஜு (மாஸ்டர் துருவன்) மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்து ஒரு குறையுமின்றி வளர்த்து வருகிறார்.
நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவன் ராஜுவோ, ஆகாயத்தில் பறக்கும் விமானத்தைக் கண்டு பரவசப்படுவது, விமான நிலைய காம்பவுண்டு சுவரில் உள்ள இடுக்கு வழியே விமானத்தைப் பார்த்து குதூகலிப்பது, பொம்மை விமானங்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைப்பது என விமானத்தோடு ஒரு பிரியத்தை ஏற்படுத்திக்கொண்டவன். ஒரு கட்டத்தில், நிஜ விமானத்தில் ஏறி உயரே பறக்க வேண்டும் என்ற் ஆசையை வளர்த்துக்கொள்கிறான். “நீ பெரியவன் ஆன பிறகு விமானத்தில் ஏறி பறக்கலாம்” என்று சமாதானப்படுகிறார் அவனது அப்பா வீரய்யா.
இந்த நிலையில் சிறுவன் ராஜு ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே அவன் உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வீரய்யா அதிர்ச்சியில் மனமுடைந்து நொறுங்கிப் போகிறார். மகன் உயிருடன் இருக்கும்போதே, விமானத்தில் ஏறி பறக்க வேண்டும் என்ற அவனது ஆசையை எப்பாடு பட்டாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று வைராக்கியம் கொள்கிறார். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.
இதற்காக தன் சக்திக்கு மீறிய சிறுசிறு வேலைகளைச் செய்து சிறுக சிறுக பணம் சேர்க்க முயற்சிக்கிறார் வீரய்யா. ஆனால் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத பல பிரச்சனைகள் குறுக்கே வந்து தடை போடுகின்றன.
இதனிடையே, வீரய்யா வசிக்கும் ஏரியாவில் சுமதி (அனசுயா பரத்வாஜ்) என்ற பாலியல் தொழிலாளியும் ‘தொழில்’ செய்து வாழ்ந்து வருகிறாள். அவள் மீது கோட்டி (ராகுல் ராமகிருஷ்ணா) என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி மையல் கொண்டு அலைகிறான். சுமதி உடை மாற்றுவதை, அவள் கஸ்டமரோடு இருப்பதை ரகசியமாக எட்டிப் பார்ப்பதோடு தனது குடிசையில் அவளது கிளாமரான புகைப்படங்களை ஒட்டி வைத்துப் பார்த்து ஜொள்ளு விடுகிறான். இதை கவனிக்கும் சுமதி “ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடு. பத்து நிமிசம் என்னோடு இருக்கலாம்” என்கிறாள். “என்கிட்ட 200 ரூபாய் இருக்கு. ரெண்டு நிமிசம் இருக்கலாமா?” என்று அவன் கேட்க, அவள் அவனைத் திட்டி விரட்டி விடுகிறாள்.
இப்போது மகன் ராஜுவின் ஆசையை நிறைவேற்ற வீரய்யாவுக்கு 10ஆயிரம் ரூபாயும், கோட்டி தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஆயிரம் ரூபாயும் தேவை என்ற கட்டத்தில், இந்த இரண்டு டிராக்குகளும் எப்போது, எப்படி சந்தித்துக் கொள்கின்றன? அதன்பின் என்ன நடக்கிறது? என்பது ‘விமானம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
வீரய்யா என்ற கதாபாத்திரத்தில் ஒரு காலை பயன்படுத்த இயலாத மாற்றுத் திறனாளியாகவும், ஏழைத் தந்தையாகவும் அற்புதமாக நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. விரைவில் மரணிக்க இருக்கும் தன் மகனின் ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என போராடும் காட்சிகளில் கண் கலங்க வைத்துள்ளார்.
தாயில்லாப் பிள்ளை ராஜு கதாபாத்திரத்தில் வருகிறான் மாஸ்டர் துருவன். அப்பா மீதும், விமானம் மீதும் வெள்ளந்தியான பிரியம் வைத்திருக்கும் கதாபாத்திரமாகவே மாறி பல இடங்களில் கைதட்டல் பெறுகிறான்.
விமான பணிப்பெண் ஸ்வேதாவாக சிறப்புத் தோற்றத்தில் வரும் மீரா ஜாஸ்மின், செருப்புத் தைக்கும் தொழிலாளி கோட்டியாக வரும் ராகுல் ராமகிருஷ்ணா, பாலியல் தொழிலாளி சுமதியாக வரும் அனசுயா பரத்வாஜ், அவரை புகைப்படம் எடுக்கும் ஃபோட்டோகிராபர் ராஜேந்திராவாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆட்டோ டிரைவர் டானியேலாக வரும் தன்ராஜ், அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்குள் பொருந்தி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை அழகாக பதிவு செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சிவபிரசாத் யனலா. ஆனால், பார்வையாளர்களை அழ வைக்க வேண்டும் என்பதற்காக செயற்கையாக பல பிரச்சனைகளை வலிந்து திணித்திருக்கிறார். அது சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும், படத்தின் ட்ரீட்மெண்ட் அரதபழசாக இருப்பதால், சலிப்பு ஏற்படுகிறது. மிகை நடிப்பையும், அதீத சோகத்தையும் குறைத்து, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இது ஒரு வெற்றிப்படமாக வந்திருக்கக் கூடும்.
விவேக் கலேபுவின் ஒளிப்பதிவும், சரண் அர்ஜுனின் இசையும் குறைந்த பட்ஜெட்டுக்கு உரிய ஓ.கே. ரகம்.
’விமானம்’ – ஒருமுறை பார்க்கலாம்!