விளையாட்டு ஆரம்பம் – விமர்சனம்
“மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) என்பது ஒரு பித்தலாட்டம். ஏமாந்து விடாதீர்கள்” என்று இந்திய ரிசர்வ் வங்கி 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்களை எச்சரித்தது. “அப்படியெல்லாம் இல்லை. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் நல்லது; நேர்மையானது” என்ற சர்ச்சைக்குரிய முரண்பட்ட கருத்தை சொல்ல வந்திருக்கிறது ‘விளையாட்டு ஆரம்பம்’.
நாயகன் யுவன் பார்த்து வந்த ஐ.டி. கம்பெனி வேலை பறிபோகிறது. நாயகி ஸ்ரவியா தூண்டுதலின் பேரில் அவர் எம்.எல்.எம். கம்பெனி ஒன்றில் சேர்ந்து நல்ல நிலைமைக்கு வருகிறார்.
இந்நிலையில், யுவன் – ஸ்ரவியா காதல், ஸ்ரவியாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான ரியாஸ்கானுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து எச்சரிக்கிறார். ஆனால், ரியாஸ்கானின் எச்சரிக்கையை காதலர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளல்லை. அதனால், எப்படியாவது யுவனை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கும் ரியாஸ்கான், எம்.எல்.எம். கம்பெனி ஒன்றை தொடங்கி, அதில் மோசடிகள் செய்து, அதை யுவன் செய்ததாகச் சொல்லி மாட்டிவிடுகிறார். இதனால், யுவன் சிறைக்கு செல்ல நேரிடுகிறது.
யுவன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டாரா? தனது காதலியை அவர் கரம் பிடித்தாரா? என்பது மீதிக்கதை.
எம்.எல்.எம். கம்பெனிகள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று செய்திகள் வெளிவரும் நிலையில், “எம்.எல்.எம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் ஒழியும்” என்று இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் சூரியன் – விஜய் ஆர் ஆனந்த். இவர்கள் கருத்து சரியா என்பதை ரிசர்வ் வங்கி தான் சொல்ல வேண்டும்.
நாயகன் யுவன் வழக்கம் போல் பால் வடியும் முகத்துடன், அமுல் பேபி போன்ற தோற்றத்துடன் இப்படத்திலும் நடித்திருக்கிறார். நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நாயகி ஸ்ரவியா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.
காமெடி என்ற பெயரில் பவர் ஸ்டார் சீனிவாசன் செய்யும் அட்டகாசங்கள் பொறுமையை சோதிக்கின்றன.
ரியாஸ்கான் போலீஸ் வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரசிக்கத் தூண்டுகிறது. பின்னணி இசையிலும் படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறார். அருண் மொழி சோழனின் கேமரா அளவாக படம் பிடித்திருக்கிறது.
‘விளையாட்டு ஆரம்பம்’ – எம்.எல்.எம் ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதங்களை தெரிந்துகொள்ள பார்க்கலாம்!