விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (ஜுலை 10) காலை 7 மணிக்கு இத்தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக வயது முதிர்ந்தோர் சக்கர நாற்காலியில் வந்து தங்கள் வாக்கினை செலுத்தியதை பல வாக்குச் சாவடிகளில் காண முடிந்தது.
276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
காலை 7.10 மணிக்கு அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 42-வது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது மனைவி வனிதா, தந்தை அரிபுத்திரியுடன் வந்து வாக்களித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, “தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால் இத்தொகுதியில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும்” என்றார்.
பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி காலை 9.10 மணிக்கு வாக்களித்தார். மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக அடையாளம் காணப்பட்ட ராதாபுரம், குண்டலப்புலியூர், பனையபுரம் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் ஒட்டன் காடுவெட்டி, காணை வாக்குச்சாவடிகளில் 1 மணி நேரமும், கருங்காலிப்பட்டு, கல்பட்டு, மாம்பழப்பட்டு, பொன்னங்குப்பம் ஆகிய வாக்குச்சாவடிகளில் 30 நிமிடங்களும் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வயர் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. சிறிது நேர தாமதத்துக்கு பின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. விக்கிரவாண்டி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் குளவிக்கூட்ட்த்தால் வாக்குபதிவின்போது இடையூறு ஏற்பட்டது. எனினும், பல இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்தது.
வாக்குப்பதிவு காலை 9 மணி நிலவரப்படி 13 சதவீதமாகவும், 11 மணி நிலவரப்படி 30 சதவீதமாகவும், மதியம் ஒரு மணி நிலவரப்படி 50.95 சதவீதமாகவும் இருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இரவு வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது, மொத்தமாக சுமார் 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.