விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி பற்றி ஸ்டாலின்: “நாங்கள் மக்களோடு இருக்கிறோம்; மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்!”

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “நாங்கள் மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல் வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார். 20-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியும், தொகுதியில் ஆங்காங்கேயும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்ட மனநிலையில் திமுக தொண்டர்கள் இருந்தனர்.

அதேபோல், சென்னையில் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முதல்வர் நன்றி:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக.

அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது.

இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம். நாங்கள் மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.