விக்ரம் வேதா – விமர்சனம்
தாதாவை என்கவுண்டர் செய்ய முயலும் காவல் துறை அதிகாரி, தனக்கு நேர்ந்த சம்பவங்களை கதையாகச் சொல்லி காவல் துறை அதிகாரிக்கு நிலைமையைப் புரிய வைக்க முயலும் தாதா – இந்த இருவருக்கும் இடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் ‘விக்ரம் வேதா’ படம்.
நேர்மையான காவல் துறை அதிகாரி மாதவன் (விக்ரம்). சென்னை மாநகரத்தில் அதிகரிக்கும் குற்றங்களைக் குறைப்பதற்காக என்கவுன்ட்டர் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறார். தாதா விஜய் சேதுபதியின் (வேதாவின்) அடியாட்களை துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியாக்குகிறார். இதனால் தலைமறைவு நிலையில் இருக்கும் விஜய் சேதுபதி வெளியே வந்து நேரடியாக மாதவனிடம் சரண் அடைகிறார். சேதுபதி ஏன் சரண் அடைந்தார், அதற்கான பின்புலம் என்ன என்று மாதவன் ஆராய்கிறார். நிஜத்தில் நடந்தது என்ன, குற்றப் பின்னணி என்ன, மாதவன் – விஜய் சேதுபதி என்ன ஆனார்கள் என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது ‘விக்ரம் வேதா’.
இது வழக்கமான போலீஸ் – தாதா கதை அல்ல என்பதை இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி படத்தின் முதல் காட்சியிலேயே உணர்த்திவிடுகிறார்கள்.
படத்தின் ஆகச் சிறந்த பலம் விஜய் சேதுபதி. வடையை கையில் வைத்துக்கொண்டு கெத்தாக காவல் நிலையத்துக்குள் நுழையும்போது கைதட்டல்களால் திரையரங்கம் அதிர்கிறது. தாதாவுக்கான உடல் மொழியுடன் கம்பீரம் காட்டுவது, உணர்வுப்பூர்வமான தருணங்களில் நெக்குருகுவது, துரோகம் உணர்ந்து பழிதீர்ப்பது என மிகவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். மெத்தட் ஆக்டிங் முறையில் காட்சிக்குக் காட்சி திரையை ஆக்கிரமிக்கிறார். “சட்டைல்லாம் ரத்தக்கறை ஆகிட்டே இருக்கு. அதான் துப்பாக்கி இருந்தா டொப்னு சுட்டுடலாம்ல” என்று நகைச்சுவையைத் தெளித்து ரசிக்க வைக்கிறார். கச்சிதமான பில்டப்பும், கதாபாத்திரத்துக்கான அழுத்தமும் ஆழமும் விஜய் சேதுபதிக்கு படம் முழுக்க நீள்வது ஆரோக்கியம்.
கண்ணியம் மிக்க காவல் துறை அதிகாரியாக கடமையை மட்டும் செய்வது, எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் பார்வையை செலுத்தி துப்பறிவது, நியாய அநியாயம் பார்க்காமல் சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடப்பது, தர்மம் – அதர்மம் என்பதை யோசித்து தர்மத்தின்படி நிற்பது, ஒரு கட்டத்தில் துப்பு கிடைக்காமல் ஒரே இடத்தில் சிக்கி நிற்பது என பக்குவமான நடிப்பை மாதவன் வழங்கியிருக்கிறார். வட்டத்தை விட்டு வெளியே வந்து நடந்ததை யூகித்து சொல்லும்போது மாதவன் கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனம் மெச்சும்படி உள்ளது.
ஷ்ரதா ஸ்ரீநாத் கதைக்கு முக்கிய கருவியாக செயல்படுகிறார். படத்தை தொய்வடையச் செய்யாமல் இருப்பதற்கு இவரது பாத்திரம் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கதிருக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. பாத்திரத்துக்கு தேவையான நடிப்பை அளித்திருக்கிறார். “வேதான்னா சும்மாவா?” என பில்டப் கொடுத்து, “அஹ்ஹாங்…” என சொல்லும்போது மட்டும் வரலட்சுமியின் வருகை உறுதியாகிறது.
பிரேம், விவேக் பிரசன்னா, ஹரீஷ் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையை அச்சு அசலாக நம் கண்முன் நிறுத்துகிறது. மனிதர்களின் முகங்களை, நியாய அநியாயங்களை, கதாபாத்திரங்களின் பண்புகளை எந்த முகமூடியும் இல்லாமல் மனதுக்குள் கடத்துகிறார்.
சாமின் இசையில் “டசக்கு டசக்கு” பாடல் சூழலுக்குப் பொருத்தமில்லாமல் உள்ளது. பின்னணி இசை படத்துக்குப் பலம் சேர்க்கிறது.
மாதவன் – விஜய் சேதுபதி இடையே நிகழும் ஆடுபுலி ஆட்டம், கதை சொல்லி தீர்வைக் கேட்பது, அந்த தீர்வை ஏற்கெனவே செயல்படுத்தி இருப்பது, தர்மம், உணர்வு என நியாயத்தின் பக்கங்களைப் பகிர்வது என திரைக்கதையை செதுக்கி நுணுக்கமான பதிவுகள் மூலம் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அழுத்தமாக தடம் பதிக்கிறார்கள். வித்தியாசமான கோணங்கள் மூலம், திருப்பம் தரும் ட்விஸ்ட் யூகிக்க முடியாத, அதே சமயம் நம்பத் தகுந்த வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு.
“டசக்கு டசக்கு” பாடலுக்கு கத்தரி போட்டு, இரண்டாம் பாதியில் ஏற்படும் சின்னச் சின்ன தொய்வை சரி செய்திருக்கலாம். சேட்டா ஹரீஷ் என்ன ஆனார்? மாதவன் ஏன் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவை எடுத்துவிட்டு காரணம் தேடுகிறார்? கதிர் – வரலட்சுமிக்கு நேர்ந்தது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இவற்றை மீறியும் மேக்கிங், கதாபாத்திரத் தேர்வு, புத்திசாலித்தனமான திரைக்கதை ஆகியவற்றால்…
‘விக்ரம் வேதா’ – வசீகரம்!