விக்ரம் – விமர்சனம்

நடிப்பு: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சூர்யா மற்றும் பலர்

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: கிரீஸ் கங்காதரன்

சென்னையில் காவல் துறையைச் சேர்ந்தவர்களை முகமூடி அணிந்த மர்மக்கும்பல் அடுத்தடுத்து கொலை செய்கிறது. இதில் காவல்துறை அதிகாரியான காளிதாஸ் ஜெயராமும்,  காவல் துறைக்குத் தொடர்பில்லாத அவரது வளர்ப்புத் தந்தையான கமல்ஹாசனும் கொலை செய்யப்படுகிறார்கள். முகமூடி அணிந்த மர்மக் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு,, காவல்துறையின் ரகசியப் பிரிவு அதிகாரியான ஃபஹத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது.

மர்மக் கொலையாளிகளைப் பற்றிய விவரங்களை சேகரிக்கும் ஃபஹத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் ஃபஹத் பாசில், மர்மக் கொலையாளிகளை கண்டுபிடித்தாரா? கமல்ஹாசனை மர்மக் கொலையாளிகள் கொலை செய்ய காரணம் என்ன? என்பது மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல்ஹாசன், முதல் பாதியில் கர்ணன் என்ற பெயரிலும், இரண்டாம் பாதியில் விக்ரம் என்ற பெயரிலும் வருகிறார். குடி நோயாளி, பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளர், மரணித்த மகனை நினைத்து துயருறுரும் பாசமான தந்தை, பேரனை பாதுகாக்க தீவிரமாக முயலும் தாத்தா என பல பரிமாண நடிப்பில் பளிச்சிடுகிறார். அதுபோல், நடனம், அதிரடி ஆக்ஷன் என புகுந்து விளையாடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் கமல்ஹாசனை விட அதிக காட்சிகளில் வருபவர் ஃபஹத் பாசில். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை புரிந்துகொண்டு அசால்டாக அசத்தியிருக்கிறார் அவர்.

வில்லனாக வரும் விஜய் சேதுபதி தனக்கே உரித்தான பாணியில் சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார். என்றாலும், அவரது கதாபாத்திரம், ஏற்கனவே அவர் ‘மாஸ்டர்’ படத்தில் செய்த கதாபாத்திரத்தை ஒத்திருப்பதால், அவரது நடிப்பில் வித்தியாசம் தெரியாதது ஏமாற்றமே.

ஃபஹத் பாசிலின் காதல் மனைவியாக வரும் காயத்ரி, விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளாக வரும் மைனா, ஷிவானி, மகேஷ்வரி ஆகியோர் கொடுத்த வேலையை இயல்பாக செய்திருக்கிறார்கள்.

படம் முடியப்போகும்போது, அடுத்து எடுக்கப்பட இருக்கும் ‘விக்ரம்-3’ படத்திற்கான லீடாக வரும் காட்சியில் சூர்யா திடீரென தோன்றி மாஸ் காட்டியிருக்கிறார். அவர் திரையில் தோன்றியதும் திரையரங்கில் விசில் சத்தம் காதை பிளக்கிறது.

”போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்” என்ற கருத்தை மையமாக வைத்து, ஆக்ஷன், சென்டிமென்ட் ஆகியவற்றை புகுத்தி, ஹீரோயின், காமெடி இல்லாமல் திரைக்கதை அமைத்து, படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். போதைப்பொருள் சமாச்சாரத்தையே சுற்றிக்கொண்டிருக்காமல், வேறு பிரச்சனைகளையும் அவர் தொட்டால் தான் அவரது திறமையை துல்லியமாக மதிப்பிட முடியும்.

அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். அன்பறிவின் சண்டைப் பயிற்சியும், கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

’விக்ரம்’ – ஆக்சன் பிரியர்களுக்கு பிரமாதமான விருந்து!