“படம் தொடங்கியவுடனே க்ளைமாக்ஸ் காட்சி”: ‘தர்மதுரை’ பற்றி விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்மதுரை’. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சீனு ராமசாமி இயக்கி இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இறுதிகட்ட பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ‘யு’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை அதிகாரிகள், படக்குழுவையும் பாராட்டி இருக்கிறார்கள்.
தணிக்கை பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இப்படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
‘தர்மதுரை’ குறித்து இதன் நாயகன் விஜய் சேதுபதி கூறுகையில், இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், இதன் கதைக்களம் சொல்லப்பட்ட விதம் தான். ‘தர்மதுரை’ என்ற கதாபாத்திரம் அவனிடம் இருக்கும் அனைத்தையுமே கொடுத்துவிடுவான். அவனுடைய வாழ்க்கையில் பணத்தைப் பெரிதாக நினைக்காத ஒருவன். பேரன்பு கொண்டவன்.
“இந்தப் படத்தில் அவனைச் சுற்றி இருக்கும் பெண்கள் அனைவருமே அவன் மீது மிகுந்த அன்பு செலுத்துவார்கள். படம் தொடங்கியவுடனே க்ளைமாக்ஸ் காட்சி தான். அதற்குப்பிறகு தான் கதையே விரியும். மக்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
“தமன்னா இப்படத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். 40 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் பாராட்டுகிறார்.
“எப்போதுமே ஒரு படத்தின் கதையில் நான் என்னை ஒப்படைத்துவிடுவேன். அது எப்போதுமே நம்மை அழகாக கொண்டு போகும். அப்படி என்னை அழகாக கொண்டுபோன மற்றொரு படம் ‘தர்மதுரை” என்றார்.