“லட்சுமிமேனன் சென்சிபிள் ஆர்ட்டிஸ்ட்”: விஜய்சேதுபதி பாராட்டு!
‘காமன்மேன்’ பி.கணேஷ் தயாரிப்பில், ரத்தின சிவா இயக்கத்தில், விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், ஹரிஷ் உத்தமன், கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ் நடித்துள்ள படம் ‘றெக்க’. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்சேதுபதி பேசியதாவது:-
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ், என்னுடன் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஒன்றாகப் படித்தவர். அவருக்குப் பெரிய பின்னணி இல்லை. நடுத்தர வர்க்கத்துக்காரர்தான். ஆனால் முடிவு எடுப்பதில் தெளிவானவர். யாருடனும் விவாதிக்க மாட்டார். தெளிவான முடிவெடுப்பார். எனக்கு இவ்வளவுதான் வியாபாரம், ,இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. தைரியமாக செலவு செய்தார்.
என்னுடன் இதில் நடித்ததுள்ள ஹரீஷ் உத்தமன் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் ‘தா’ படத்தில் நாயகனாக நடித்தபோது நான் அவர் நடிப்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன். அடடா.. முதல் படத்திலேயே இப்படி ஒரு நடிப்பா? என வியந்தேன். ஹரீஷ் திரும்பவும் கதாநாயகனாக வர வேண்டும். அவரை வைத்துப் படம் செய்ய எனக்கும் ஆசை. அவர் ஒரு முழுமையான நடிகர்.
இந்தப் படத்தில் சதீஷ் நடித்துள்ளது என் பாக்யம். அவரை சீரியஸாவும் நடிக்க வைக்க முயன்றிருக்கிறோம்.
லட்சுமிமேனன் பற்றிச் சொல்ல வேண்டும் அவர் ஒருசென்சிபிள் ஆர்ட்டிஸ்ட். அறிவுள்ள நடிகை. அன்று நடிக்கப்போகும் காட்சி, மனநிலை, சூழல், வசனம் எல்லாம் கேட்டு தயாரான பிறகுதான் நடிப்பார். வசனத்துக்காக தமிழைக் கற்றுக்கொண்டு நடிக்கிறார்.
கிஷோர் ‘வெண்ணிலா கபடிக் குழு’வில் நடித்தபோது நான் துணை நடிகர் ஆனால் அன்று முதல் இன்றுவரை அப்படியே இருக்கிறார். மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகர். சிஜா என்பவர் என்னைவிட 8 வயது சின்னவர். என் அக்காவாக நடித்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிகுமார் சார் பெரிய இயக்குநர் ஆனால் அது தெரியாமல் எளிமையாக இருந்தார். அவர் ஒரு சக்தி வங்கி எனலாம் .
ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர், தான் நினைத்தது மாதிரி காட்சி வராமல் விடமாட்டார்.
நடனம் ராஜுசுந்தரம் மாஸ்டர். 800 படங்கள் செய்தவர். இப்படத்தில் அவர் தந்த உழைப்பு அபாரம். ஒளிப்பதிவாளர் தினேஷ் எல்லாவற்றையும் ரொம்ப அழகாகக் காட்டியிருக்கிறார். இமான் இளிமையான பாடல்கள் கொடுத்திருக்கிறார்.
இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.