விஜயானந்த் – விமர்சனம்
நடிப்பு: நிஹால், சிரி பிரஹலாத், ஆனந்த் நாக், வினயா பிரசாத், பாரத் போபண்ணா, அர்ச்சனா கொட்டிகே மற்றும் பலர்
இயக்கம்: ரிஷிகா சர்மா
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி
இசை: கோபி சுந்தர்
தயாரிப்பு: ‘விஆர்எல் பிலிம் புரொடக்சன்ஸ்’ டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
கன்னட சினிமாவின் முதல் ’வாழ்க்கை வரலாற்றுப்படம்’ (’பயோபிக்’) என்ற பெருமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக வெளிவந்திருக்கிறது ‘விஜயானந்த்’. ஒரு சாதாரண உழைப்பாளி தனது கடின உழைப்பாலும் கூர்மதியாலும் மிகப் பெரிய தொழிலதிபராக வளர்ந்த நிஜ தன்னம்பிக்கைக் கதை இது.
கர்நாடக மாநிலத்தில், காலால் பெடல் மிதித்து அச்சிடும் ஒரேயொரு அச்சு இயந்திரத்தை வைத்துக்கொண்டு சுயதொழில் செய்து வருகிறார் அப்பா பி.ஜி.சங்கேஸ்வர். அவர் நடத்தி வந்த அச்சுத் தொழிலை தானும் கற்றுக்கொள்ளும் மகன் விஜய் சங்கேஸ்வர், அப்பாவை சாமர்த்தியமாக சம்மதிக்க வைத்து, ‘விக்டோரியா’ என்கிற தானியங்கி அச்சு இயந்திரத்தை ரூ.80 ஆயிரம் கடனுக்கு வாங்கி வந்து தொழிலை மேலும் லாபகரமாக மாற்றுகிறார்.
அதேநேரத்தில் அச்சுத் தொழிலை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், அப்பாவின் எதிர்ப்பை மீறி தன் சொந்த முயற்சியில் ஒரு லாரியை வாங்கி, அதை தானே ஓட்டி, சரக்குப் போக்குவரத்து துறையில் குதிக்கிறார் விஜய் சங்கேஸ்வர். வாடிக்கையாளர்களைப் பிடிக்க கோகாக் சந்தையில் தனது ஒற்றை லாரியுடன் பல நாட்கள் காத்திருப்பது, அங்குள்ள மார்கெட்டில் ஏற்கெனவே கோலோச்சும் ஆட்களுடன் மல்லுக்கட்டி முதல் சவாரியைப் பிடிப்பது எனதொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையாகப் போராடி முன்னேறுகிறார். பின்னர் தொழில் போட்டியாளர்களை வென்று, நாளாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகளுடன் ’வி ஆர் எல்’ எனப்படும் ‘விஜயானந்த் ரோட் லைன்ஸ்’ என்ற பெரிய லாஜிஸ்டிக் நிறுவனமாக அதை உயர்த்துகிறார்.
அவர் சரக்குப்போக்குவரத்து துறையோடு நிறுத்திக்கொள்ளாமல் பத்திரிகை துறையிலும், அரசியலிலும் மிகப்பெரிய சாதனைகளைச் செய்கிறார்.
இந்த சாதனைப் பயணத்தில் அவர் சந்தித்த சோதனைகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்களை எப்படி முறியடித்து வெற்றி பெற்றார் என்பதை விவரிப்பது தான் ‘விஜயானந்த்’ படக்கதை.
விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கையில் நிஜமாக நடந்த முக்கிய சம்பவங்களுடன் கமர்ஷியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமான பயோபிக் படமாக இயக்கியிருக்கிறார் ரிஷிகா சர்மா.
விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஹால், விஜய் சங்கேஸ்வரின் மகனான ஆனந்த் சங்கேஸ்வர் வேடத்தில் நடித்திருக்கும் பாரத் போபண்ணா, விஜய் சங்கேஸ்வரின் மனைவியாக நடித்திருக்கும் சிரி பிரஹலாத், அப்பாவாக நடித்திருக்கும் ஆனந்த் நாக், வினயா பிரசாத், அர்ச்சனா கொட்டிகே, பத்திரிகையாளராக நடித்திருக்கும் நடிகர் என அனைத்து நடிகர்களும் தத்தமது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவு, கோபி சுந்தரின் இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்களிலும் நேர்த்தியாக இருக்கிறது.
சுயதொழிலில் முன்னேறுவதற்கும் சாதிப்பதற்கும் தன்னம்பிக்கை, துணிவு, நேர்மை இருந்தால் போதும் என்ற உன்னதக் கருத்தை வலியுறுத்தும் படம் என்பதால் இதை இரு கரம் நீட்டி வரவேற்கலாம்.
‘விஜயானந்த்’ – இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் வாழ்க்கை வரலாறு; கண்டு களிக்கலாம்!