“விஜயகாந்த் என்ற சுமை விலகினால் மக்கள்நலக் கூட்டணிக்கு நல்லது!”
“தமிழ்நாட்டில் சல்லிக்காசுக்கு போணியாகாத காங்கிரஸ் கட்சி என்ற சுமையை திமுக சுமந்து திரிவதைப் போல, பொதுவெளியில் பொறுப்பில்லாமல் அநாகரிமாக நடந்துகொள்ளும் விஜயகாந்த் என்ற சுமையை தேவையில்லாமல் நாங்கள் சுமந்துகொண்டிருக்கிறோம். அவர் மக்கள்நலக் கூட்டணியுடனான உறவை துண்டித்துக்கொண்டால் எங்களுக்குத்தான் நல்லது” என்று இடதுசாரிக் கட்சிகளின் கீழ்மட்ட தொண்டர்கள் கருதுகிறார்கள்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி, தாமக ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட தேமுதிக படுதோல்வியைச் சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். அக்கட்சியின் வாக்கு வங்கி 2.4 சதவிகிதமாக குறைந்தது. இதனால் அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதன் முரசு சின்னமும் பறிபோனது.
இந்நிலையில், தினமும் 10 தேமுதிக மாவட்டச் செயலாளர்களை நேரில் வரவழைத்து, தோல்விக்கான காரணங்களை விஜயகாந்த் கேட்டறிந்து வருகிறார். இதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் செயலாளர்களுடன் விஜயகாந்த் திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சரியான கூட்டணி அமைக்காததால்தான் தோற்றதாக மாவட்டச் செயலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலிலாவது சரியான முறையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் விஜயகாந்தை கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே மக்கள்நலக் கூட்டணியுடனான உறவைத் துண்டித்துக்கொண்டு விஜயகாந்த் விரைவில் வெளியேறிவிடுவார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து இடதுசாரிக்கட்சியின் கீழ்மட்ட தொண்டர் ஒருவர் கருத்து கூறுகையில், “தமிழ்நாட்டில் சல்லிக்காசுக்கு போணியாகாத காங்கிரஸ் கட்சி என்ற சுமையை திமுக சுமந்து திரிவதைப் போல, பொதுவெளியில் பொறுப்பில்லாமல் அநாகரிமாக நடந்துகொள்ளும் விஜயகாந்த் என்ற சுமையை தேவையில்லாமல் நாங்கள் சுமந்துகொண்டிருக்கிறோம். அவர் மக்கள்நலக் கூட்டணியுடனான உறவை துண்டித்துக்கொண்டால் எங்களுக்குத்தான் நல்லது” என்றார்.