எஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி
நடிகர் விஜய்யை முன்நிறுத்தும் ’விஜய் மக்கள் இயக்கம்’ என்ற விஜய் ரசிகர் மன்றம் , கட்சியாக மாற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் இதை திட்டவட்டமாக மறுக்க, ”நான் தான் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளேன், அவருக்கே இது தெரியாது” என அவருடைய தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் ஒன்றை அளித்தார்.
இதையறிந்த விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் எஸ்.ஏ.சி. கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த விஜய், தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என உத்தரவிட்டார். மேலும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது ’அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க’த்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
இந்நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் எஸ்.ஏ.சிக்கு ஆதரவாக இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்து அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.