”அம்பேத்கரின் பிறந்தநாளை ’இந்திய ஜனநாயக உரிமைகள் தினமாக’ ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்!” – விஜய்

‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தவெக தலைவரும் நடிகருமான விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இந்நூலை வெளியிட்டு பேசியதாவது:-

இந்த விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். எல்லாருக்கும் பிடித்த தங்கும் இடம் என்ன என்று கேட்டால், நியூயார்க் என்பார்கள். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன், அங்கு போய் படித்து சாதித்தவர் ஒருவர் இருந்தார். அவர் எந்த சூழலில் படித்து சாதித்தார் என்பது பெரிய விசயம். நீ இந்த சாதியில் பிறந்து ஏன் இப்படி பண்ற? என்று அவர் சார்ந்த மக்களே அவரை பேசினர். அத்தனை சக்திகளும் எதிராக இருந்த போதும், ஒரு சக்தி மட்டும் தான் தொடர்ந்து படிக்க சொன்னது. அது தான் அந்த மாணவர் உள்ளே இருந்த வைராக்யம். அந்த வைராக்யம் தான், அவரை பின்னாளில் அந்த மாணவரை சட்டம் இயற்ற வைத்தது. அந்த மாணவர் தான் அம்பேத்கர். 

வன்மத்தை காட்டிய இந்த சமூகத்திற்கு, அவர் திரும்ப என்ன செய்தார் என்பது தான் அவரின் சாதனை. நம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை வழங்கி, நமக்குப் பெருமை தந்தவர். ”பிறப்பால் நாம் அனைவரும் சமம், நீ என்ன சாதியில் பிறந்திருந்தாலும், சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம்” என்ற உயரிய கோட்பாட்டை உறுதி செய்யும் அரசியல் சாசன சட்டத்தை வழங்கி பெருமையைத் தேடித் தந்தவர் அம்பேத்கர்.

இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் என்ன நினைப்பார்? நம் நாட்டின் நிலைமையை நினைத்து பெருமைப்படுவாரா? வருத்தப்படுவாரா? அப்படியே வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார்?

இன்றைக்கு நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் அமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு, கடமை ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அந்த பொறுப்போடும் கடமையோடும் தான் நான் ஆணித்தரமாக சொல்கிறேன்.

 ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். அது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாள். அன்று தான் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஜனநாயகம் பிறந்த தினம். அதனால் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதியை ’இந்திய ஜனநாயக உரிமைகள் தினமாக’ ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.

அம்பேத்கர் பற்றி யோசிக்கும்போது கண்டிப்பாக சட்டம் – ஒழுங்கு, சமூக நீதி பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இன்றைக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு விஜய் பேசினார்.