தியாகராஜன் குமாரராஜா படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி!
விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, தேசிய விருதுகள் வழங்கப்பட்ட ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி இருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நாயகர்களாக விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘ஆரண்ய காண்டம்’ படத்தின் பின்னணி இசை பெரியளவில் பேசப்பட்டது. அப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் இப்படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.
சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி திருநங்கை வேடமிட்டு இருப்பது போலவும், அவருக்கு தியாகராஜன் குமாரராஜா காட்சியை விளக்குவது போலவும் அப்புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன.
திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி ஒரு காட்சியில் மட்டும் வருகிறாரா? அல்லது படம் முழுக்க இந்த வேடத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.
நீண்ட நாட்கள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.