விஜய்யும், சீமானும், பின்னே கஸ்தூரியும்…!

கடந்த சில வாரங்கள் தமிழ் அரசியல் சூழலுக்கு பல சுவாரஸ்யங்கள் கொடுத்திருக்கின்றன.

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்த மேடையில் ‘திராவிடமும் தமிழ் தேசியமும் தமிழ்நாட்டின் இரு கண்கள். அதை நாங்கள் பிரித்து பார்க்கப் போவதில்லை’ எனப் பேசியிருந்தார். அடுத்த சில நாட்கள் விஜய்க்கு பதிலடியாக பேசிய வலதுசாரிய தமிழ்தேசியவாதி சீமான் ‘சாலையோட இந்தப் பக்கம் நில்லு, இல்ல அந்தப் பக்கம் நில்லு. இல்லன்னா, லாரி அடிச்சு செத்துப் போவ’ என சொல்லிவிட்டு திராவிடமும் தமிழ்தேசியமும் வேறு வேறு என பேசிக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக ‘பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காரணம் திராவிடமும் திமுகவும் பெரியாரும்தான்’ எனப் பேசி கலைஞர் குடும்பத்தை தெலுங்கர்கள் என சூசமாக சுட்டி கொச்சையாக பேசிக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

இவை யாவும் திட்டமிட்ட தொடர்ச்சியா, அல்லது கனக்கச்சித யதேச்சை சம்பவங்களா எனத் தெரிய முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று சரியாக பொருந்தி போகின்றன.

மூன்று சம்பவங்களுக்கும் அடிப்படை இரு கருத்தியல்கள். திராவிடம், தமிழ்தேசியம்!

திராவிடம் என்பது பூகோள ரீதியாக தென்னிந்தியாவை, குறிப்பாக தெற்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதியை வரையறுக்கிறது. மொழியியலில் ஆரிய ஐரோப்பிய மொழிகள் அல்லாத இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்விக மொழிக் குடும்பமாக வரையறுக்கப்படுகிறது. அரசியலில் ஆரிய-பார்ப்பன பண்பாட்டு ஆதிக்கம் மற்றும் ஒடுக்குமுறையை மறுக்கும் அரசியலாக நிறுவப்படுகிறது.

தமிழ் தேசியம் என்பது அடிப்படையில் இந்திய தேசியத்துக்கும் பெருந்தேசியத்துக்கும் எதிரானது. தமிழர்களுக்கென இறையாண்மை பொருந்திய தமிழ்நாட்டுக்கான அரசியல் விழைவுதான் தமிழ்தேசிய அரசியல் கோட்பாடு.

தமிழ்தேசியத்துக்குள் உட்பிரிவுகளாக இரண்டு உண்டு. ஒன்று, வலதுசாரிய தமிழ்தேசியம். அது தமிழ்நாட்டில் நிலவும் சாதிய, மத, வர்க்க ஆதிக்கங்களை ஏற்றுக் கொள்ளும். இன்னொன்று இடதுசாரிய தமிழ்தேசியம். சாதி, மத வர்க்க ஆதிக்கங்களை அழித்தொழித்து சமத்துவ தமிழர் பரப்பை உருவாக்க விழையும்.

திராவிடம் மற்றும் தமிழ்தேசியத்துக்கு என பல மூலவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. இரண்டுக்கும் பொதுவாக இருக்கும் ஒரு தலைவர் பெரியார். ‘திராவிட நாடு திராவிடருக்கே’, ’தமிழ்நாடு தமிழருக்கே’ என்றெல்லாம் அரசியல் முழக்கங்களை வைத்தவர் அவர். எனவே தமிழ்தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் முக்கியமான வகையில் பெரியார் முன்னோடியாக இருக்கிறார்.

ஆனால் பெரியார் பேசியது இடதுசாரிய தமிழ்தேசியம். அவர் சாதியை, மதத்தை, ஆதிக்கத்தை ஏற்காது பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை முன் வைத்து தன் அரசியலை வடித்தவர். எனவே அதில் பார்ப்பனர்களுக்கு இடம் இருக்கவில்லை. ஆனால் சாதி, மதம், வர்க்கம் போன்றவற்றை ஏற்கும் வலதுசாரிய தமிழ்தேசியத்துக்கு பெரியார் உவப்பானவராக இல்லை. எனவே அவர்கள் பெரியாரை எதிரியாக பாவிக்கத் தொடங்கினர்.

இவற்றுக்குள்ளிருந்துதான் தமிழ்நாட்டில் நிகழும் இன்றைய உரையாடல்கள் யாவும் கிளைத்தெழுந்திருக்கின்றன.

திராவிடக் கருத்தியலின் பெரும்பான்மையை எடுத்துக் கொண்டு திமுக தேர்தல் அரசியலில் இறங்கியது. திமுகவிலிருந்து பிறகு அதிமுக வந்தது. அடுத்தடுத்து பல கட்சிகள் திராவிடப் பெயர்களுடன் உருவாகின. எனினும் இந்தியப் பெருந்தேசியத்துக்கு மொழித்திணிப்பு, எமர்ஜென்சி, அதிகார குவிப்பு என எல்லா காலங்களிலும் முக்கியமான உள்முரணாக இருந்து வந்த கட்சி திமுகதான். எனவே அதை ஒழிப்பதற்கென பல முயற்சிகளை இந்திய அரசுகள் வரலாற்றினூடாக எடுத்திருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் ஆட்சி சபையாக அடையாளப்படுத்தப்படும் நாடாளுமன்றத்துக்கு சென்று தனி நாடு கோரிக்கை வைத்து பேசிய அறிஞர் அண்ணாவின் உரை, இந்திய ஆட்சியதிகாரத்தின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் சிம்ம சொப்பனம்!

எனவே ஒரு வகையில் திராவிடமும் தமிழ்தேசியமும் தமிழ்நாட்டு அரசியலின் இரு கண்கள் என நடிகர் விஜய் பேசியதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால் தமிழ்தேசியத்தின் அடிப்படைக் கூறு இந்திய தேசியத்துக்கு எதிரானது. குறிப்பாக திராவிட நாடு கோரிக்கை முன் வைக்கப்பட்ட பிறகு சீன யுத்தத்தை காரணம் காட்டி, இந்திய பாதுகாப்புக்கு தனிநாடு கோரிக்கை ஆபத்து என்கிற நிலையை இந்திய அரசு சட்டப்பூர்வமாக உருவாக்கியது. எனவே இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டிய கட்சியான திமுகவும் அக்கோரிக்கையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்றைய நிலையில் தேர்தல் அரசியலில் தமிழ் தேசியத்தை முன் வைத்து பேசும் பலர் மீதும் நமக்கு கேள்வி எழுவதும் இதனால்தான். இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நடத்தப்படும் தேர்தல்களில் போட்டியிட்டு, வென்று, இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் பொறுபேற்றுக் கொண்ட ஒருவர், எப்படி இந்திய அரசியல் சாசனத்தை எதிர்க்க முடியும்? முதலில் அத்தகைய தீவிரம் நிறைந்த ஒருவரை இந்திய ஒன்றியம் தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமா? இந்திய அரசியல் சாசனத்தின்படி இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரித்துக் கொடுக்கும்படி ஒருவர் கோரி விட முடியுமா?

இந்த யதார்த்தத்தை தாண்டி ஒருவர் வந்து தேர்தலில் போட்டியிட்டு வென்று அரசியல் சாசனப் பிரதிநிதியான ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க, பதவியேற்று அதற்குப் பிறகு நான் தனி நாடு வாங்கி தருவேன் என சொல்வது என்ன ரகத்தில் வரும்?

இந்தியப் பெருந்தேசியம் இந்தியாவில் பல மாநிலங்களில் வாழும் மக்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சினை என்றால், அதைக் கட்டி காக்கும் சிந்தையான பார்ப்பனியம் இன்னொரு முக்கியமான பிரச்சினை.

எனவே இந்தியப் பெருந்தேசியத்துக்கு, திராவிடமும் தமிழ்தேசியமும் இரு முக்கியமான பிரச்சினைகள்.

இதனாலேயே அந்த இரு கருத்தியல்களையும் நீர்த்துப் போக வைக்க, மடைமாற்றி விட எல்லா உத்திகளையும் இந்தியப் பெருந்தேசியம் செய்யும்.

நடிகர் விஜய்க்கு பதில் கூறுகையில், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார், திமுக கச்சத்தீவை தாரை வார்த்தது என்றெல்லாம் பேசிய வலதுசாரிய தமிழ்தேசியவாதி சீமான், ’தமிழர் கடவுள் முருகனின் தைப்பூசத்துக்கு விடுமுறை கொடுத்தவர் அய்யா எடப்பாடி’தான் என அதிமுகவை ஒரு பக்கம் புகழ்கிறார். அதிமுக, திராவிட கட்சி அல்ல என்பதை சீமான் ஏற்றுக் கொள்கிறாரா என்பதையும் அதை எடப்பாடி ஏற்றுக் கொள்கிறாரா என்பதையும் இருவரும்தான் சொல்ல வேண்டும். அல்லது இரு கட்சிகளில் ‘திராவிட’த்தை விட ‘அண்ணா திராவிட’ம் சிறந்ததாக எப்படி இருக்கிறது என்பது குறித்து சீமான்தான் விளக்கம் தர வேண்டும்.

அடுத்ததாக கஸ்தூரி, சீமானின் குரலை தொட்டு ‘தெலுங்கர்கள்தான் திராவிடம்’ என கலைஞர் குடும்பத்தை கொச்சைப்படுத்தும் தொனியில் பூடகமாக பேசி, திராவிடத்தை ’இந்த வகையில் அம்பலப்படுத்தியது (வலதுசாரி) தமிழ்தேசியம்தான் என ஓர் உருட்டு உருட்டி, பல பார்ப்பன அறிஞர்கள் தமிழுக்கு தொண்டாற்றியபோது பெரியார் கோலி விளையாடிக் கொண்டிருந்தார் எனப் பேசி, இறுதியில் ’பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்’ என சீமானின் வலதுசாரிய தமிழ்தேசியத்தை பாஜகவுடன் இணைக்கும் சுவாரஸ்யம்தான், இந்தத் தொடர் சம்பவங்களிலேயே சுவாரஸ்யமான முடிச்சு!

இந்தித் திணிப்பு இருக்கும் வரை தமிழரின் எதிர்ப்பு இருக்கவே செய்யும். இந்தியப் பெருந்தேசியம் இருக்கும் வரை தமிழ்தேசியக் கோட்பாடு இருக்கவே செய்யும். அது இந்திய தேசியத்தின் பதவிப் பிரமாணத்தை எதிர்பார்க்காது. பார்ப்பனிய ஆதிக்கம் இருக்கும் வரை பார்ப்பனிய எதிர்ப்பும் இருக்கவே செய்யும். மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை பகுத்தறிவு பிரசாரம் இருக்கவே செய்யும். இதுவே இயங்கியல்.

இந்த போராட்ட போக்குகளை நீர்த்துப் போக வைக்கவென கருங்காலி போக்குகளும் தொடர்ந்து உருவாக்கப்படும். அதுவும் இயங்கியல்தான். அந்தப் போக்குகளை அடையாளம் காட்டுவதற்கான வெளிச்சங்கள்தாம் பெரியார், திராவிடம், தமிழ் பண்பாடு, இடதுசாரி தமிழ்தேசியம்!

இந்திய தேசியத்தை எதிர்க்க வேண்டுமெனில், பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டுமெனில், திராவிடத்தை ஆதரிக்க வேண்டும். திராவிடத்தை ஆதரிக்க வேண்டுமெனில் பெரியாரை ஆதரிக்க வேண்டும்.

இவற்றில் எது ஒன்றை விடுத்தாலும், அது தமிழருக்கானதாக இருக்காது. தமிழ்நாடுக்கானதாக இருக்காது.

-RAJASANGEETHAN