தூத்துக்குடியில் விஜய்: உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறினார்!

வெகுமக்களை பாதிக்கும் நாசகார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய 100-வது நாள் (மே 22ஆம் தேதி) போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று இரவு தூத்துக்குடி சென்றார். எவ்வித விளம்பரமுமின்றி, தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த மிகச்சிலருடன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் நேரில் சென்றார். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

0a1e

 இதற்குமுன் நடிகர் ரஜினிகாந்த், “நான் நடிகனாக தூத்துக்குடி போகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் என்னைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று விளம்பரமாக பேட்டி கொடுத்துவிட்டுச் சென்றது, தூத்துக்குடியில் தனது ரசிகர்கள் புடைசூழ கையசைத்தபடி ஹாயாக ஊர்வலம் போனது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓரிருவரை மட்டும் ஒப்புக்கு சந்தித்துவிட்டு புறப்பட்டது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஹோட்டலுக்கு வரவழைத்துவிட்டு, அவர்களிடம் சம்பிரதாயத்துக்குக்கூட பேசாமல் சென்னை திரும்பியது ஆகியவற்றை நினைவு கூரும் சமூக வலைத்தள பதிவர்கள், ரஜினிக்கு மாறாக விஜய் முன்னறிவிப்போ, விளம்பரமோ இல்லாமல் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மனிதநேயப் பண்பை பாராட்டி, பதிவிட்டு வருகிறார்கள்.