விஜய் தேவரகொண்டா முதல்முறையாக கிராமிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி சி புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் 59ஆவது திரைப்படம் இது.
விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான நேற்று இந்தப் படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கத்தியை கையில் வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அதிரடியாக படம் உருவாகிறது எனலாம். மேலும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் டயலாக் படம் மாஸாக இருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்தத் திரைப்படம் கிராமிய பின்னணியில் மிக பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்படுவதாகவும், இது பான் இந்திய அளவிலான கவன ஈர்ப்பை கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா முழுக்க முழுக்க கிராமிய பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்றும், இவர் திரையில் தோன்றுவதை பார்ப்பதற்கு அதிரடியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரவி கிரண் கோலா இதற்கு முன் ‘ராஜா வாரு ராணி காரு’ எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு திறமையான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். மேலும் அவர் இப்படத்தின் திரைக்கதைக்காக அயராது உழைத்து, நுட்பமாக செதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவும் இந்த திரைப்படத்தை மிகவும் தரமான படைப்பாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இதனை பான் இந்திய அளவில் உருவாக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய் தேவரகொண்டா தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் அவரது திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என அவர் நம்புகிறார்.
இந்த திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.