‘கபாலி’ பாணியில் ‘விஜய் 60’ படத்துக்கு தலைப்பு – ‘பைரவா’!

‘தெறி’ படத்தைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், சதீஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். பெயர் அறிவிக்கப்படாமல் ‘விஜய் 60’ என்று படக்குழுவினரால் அழைக்கப்பட்ட இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிவுற்று இருக்கிறது. தற்போது ராஜமுந்திரியில் படத்தின் முக்கிய இடத்தில் வரும் சண்டைக்காட்சியை படமாக்க கிளம்ப இருக்கிறது படக்குழு.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விநாயகர் சதுர்த்தி தினமான நாளை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அதற்கு முன்பாகவே படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
போஸ்டர் அச்சிடப்படும் இடத்தில் இருந்து தலைப்பு மற்றும் போஸ்டர் வடிவமைப்பு கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பைரவா’ என்று படத்துக்கு தலைப்பிட்டு இருக்கிறது படக்குழு. மேலும், அப்போஸ்டரில் ‘2017ஆம் ஆண்டு ஜனவரி வெளியீடு’ என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
பழைய தமிழ் திரைப்படங்களில் ‘கபாலி’ என்ற பெயரை போலவே ‘பைரவன்’ என்ற பெயரையும் பெரும்பாலும் வில்லனுக்கோ அல்லது வில்லனின் ஆட்களுக்கோ வைப்பது தான் வழக்கம். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருப்பதால், அதே பாணியில் ‘பைரவா’ என்ற தலைப்பை ‘விஜய் 60’ படத்துக்கு சூட்டியிருக்கிறது படக்குழு.