எப்படி இருக்கிறது வெற்றி மாறனின் ‘விடுதலை 2’ திரைப்படத்தின் டிரெய்லர்?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, வரும் டிசம்பர் 20-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கும்  ‘விடுதலை 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஏகோபித்த ஆதரவைப் பெற்று வருகிறது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘விடுதலை’ முதல் பாகம். இதன் நீட்சியாக இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதையொட்டி இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

எப்படி இருக்கிறது:

“நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு” என விஜய் சேதுபதியின் வசனத்துடன் தொடங்கிறது ட்ரெய்லர்.

டார்க்காக தொடங்கும் ட்ரெய்லர் அடுத்து காதலை நோக்கி பயணிக்கிறது. மஞ்சு வாரியர் கிராப் வெட்டிக் கொண்டும் ஈர்க்கிறார். அவருக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக இளையராஜாவின் இசை இதம்.

கம்யூனிஸ்ட்டாக கிஷோர், அனுராக் காஷ்யப்பின் சர்ப்ரைஸ் என்ட்ரி, கென் கருணாஸ் தோற்றம் டிரெய்லரின் ஹைலைட்ஸ்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், திராவிட அரசியலின் தெளிப்பு, கம்யூனிஸ்ட் கொடிகளின் அணிவகுப்பு என அழுத்தமான அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளதை காட்சிகள் உணர்த்துகின்றன.

முழுக்க முழுக்க விஜய் சேதுபதிக்கான படமாக தெரிந்தாலும், டிரெய்லரின் இறுதியில் சூரி என்ட்ரி கொடுக்கிறார்.

“வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” போன்ற வசனங்கள் நச் ரகம்.

இப்போதே இந்த டிரெய்லர், அதிலும் குறிப்பாக “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என்ற வசனக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி, நிரம்பி வழிகிறது.

டிரெய்லர் வீடியோ: