நடிகை விசித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ’டாப் ஹீரோ’ பாலகிருஷ்ணா?
21 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட படப்பிடிப்பில், தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை விசித்ரா தெரிவித்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவி நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. 7-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிக் பாஸ் இல்லத்தில் தங்கியிருக்கும் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை பூகம்பம் போல் தாக்கி, புரட்டிப்போட்ட சம்பவம் குறித்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் பேசிய நடிகை விசித்ரா, 2001ஆம் ஆண்டு தெலுங்கின் ’டாப் ஹீரோ’ ஒருவரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது அந்த ஹீரோ தன்னைப் பார்த்த உடனேயே பெயரை கூட கேட்காமல் ‘கம் டு மை ரூம்’ என அறைக்கு அழைத்ததாகவும், அடுத்த நாள் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி சொன்னபோது ஸ்டன்ட் மாஸ்டர் தன்னை கன்னத்தில் அறைந்தது பற்றியும் கண்ணீர் மல்க பேசினார். இதனால்தான், தான் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகியதாகவும் அவர் கூறினார். அவர் கூறியது பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளானது.
விசித்ரா பேசுகையில், தன்னை அறைக்கு அழைத்த நடிகர் பெயரையும், கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயரையும் கூறியிருந்தார். ஆனால், அவை ம்யூட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில், விசித்ராவை அறைக்கு அழைத்தது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்றும், அவரை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயர் ஏ.விஜய் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். கடந்த 2001-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘பலேவடிவய்யா பாசு’ (Bhalevadivi Basu). இந்தப்படத்தில் நடிக்கும்போது தான் விசித்ராவுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கருத்துகளை பரப்பி வருகின்றனர்.