குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மார்கரெட் ஆல்வா vs ஜெகதீப் தங்கர்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைவதால், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18ஆம் தேதி) நடைபெறுகிறது. இத்தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும், ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும் போட்டியிடுகிறார்கள்.
இதனிடையே, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்டு 10–ம் தேதி முடிவடைவதால், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மார்கரெட் ஆல்வா கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர். ஒன்றிய அரசின் நாடாளுமன்ற விவகாரத் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை போன்றவற்றின் அமைச்சராக இருந்திருக்கிறார். மேலும், கோவா, ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ஆளும் பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மேற்கு வங்க ஆளுநராக பதவி ஏற்றது முதல் அம்மாநிலத்தின் மம்தா அரசுக்கு அத்துமீறி சட்டவிரோதமாக தொல்லைகள் கொடுத்து வந்ததற்குப் பரிசாக அவர் பாஜக-வின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.