“நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்!” – குடியரசு துணை தலைவர்
”நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்” என்று 4-வது சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தி உள்ளார்.
4-வது சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றிய ஜக்தீப் தன்கர், “உலகெங்கிலும் இருந்து பலர் இங்கு வந்திருக்கிறீர்கள். பருவநிலை மாற்றம் குறித்த இந்த உச்சிமாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களிடையே உரையாற்றுவதை எனக்கு கிடைத்த கவுரவமாகக் கருதுகிறேன். பருவநிலை மாற்றம் என்ற வார்த்தை, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அனைத்து மேடைகளிலும் எதிரொலிக்கும் நிலையில், இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது.
“உயிரி எரிபொருள்: லட்சிய பாரதத்திற்கு வழி” என்ற தற்காலத்திற்கேற்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை களைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறேன். சோளத்தில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயின் மகன் என்ற முறையில், இரண்டு அம்சங்கள் குறித்து எனக்கு தோன்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலாவது, உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிப்பது, இரண்டாவதாக, இது சில அம்சங்களில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என்பதால் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு மிகச் சரியானதாகும். ஒரு காலத்தில் பசுமை சோலையாக இருந்த நமது கிரகம் (பூமி), இயற்கை வளங்களை அளவுக்கு மீறி வெட்டி எடுப்பது, காடுகள் அழிப்பு போன்றவற்றால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளால் மனிதகுலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பருவநிலை மாற்றம் என்பது நாளுக்கு நாள் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில், இப்பிரச்சனைக்கு உலக அளவில் அவசர தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். 800 கோடி மக்கள் வசிக்கும் இந்த பூமியை தவிர, நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.