தமிழக நிழல் முதல்வர் வெங்கய்யா நாயுடு – பாஜக.வின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்!
ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தின் நிழல் முதல்வராக இருந்து அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டிப் படைப்பவர் என எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, பாஜக.வின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தற்போதைய மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 4ஆம் தேதி முறைப்படி வெளியிட்டது. இதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 18. மறுநாள் (ஜூலை 19) வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூலை 21 வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபால்கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். கோபால்கிருஷ்ண காந்தி மகாத்மா காந்தி, ராஜகோபாலாச்சாரி ஆகியோரின் பேரன் ஆவார். இவர் மேற்குவங்க ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். தற்போது அவர் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.